என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலைச்சாலையில் விபத்துக்களை தடுக்க இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
குமுளி மலைச்சாலை பாலத்தில் விபத்துகளை தடுக்க இரும்பு தடுப்பு வேலி
- மலைச்சாலையில் தாழ்வான தடுப்புச்சுவர் பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- குடிநீர் குழாய்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணை அருகே தேக்கடி ஏரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து தரைப்பகுதியான லோயர் கேம்ப் வரை 6கி.மீ தூரம் மலைச்சாலையாகும். எனவே தேக்கடியில் சுரங்க வாய்க்கால் அமைத்து அங்கிருந்து 4 ராட்சத குழாய்கள் மூலம் மலைச்சரிவு வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குழாய்களில் அதிக பட்சமாக 1800 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லலாம். இக்குழாய்கள் குமுளி மலைச்சலையின் 3 இடங்களில் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் இந்த குழாய்களை பார்ப்பதுடன் அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
இப்பகுதி பாலத்தின் தடுப்பு சுவர் தாழ்வாக இருப்பதால் தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் இப்பகுதியில் நிலை தடுமாறி பள்ளத்தில் விழும் நிலையும் இருந்தது. இதனை தடுக்க தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தாழ்வான தடுப்புச்சுவர் பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆரம்ப த்தில் உயரமாக இருந்த தடுப்புசுவர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சாலை பணியால் தாழ்வாக மாறிவிட்டது. குழாய்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்படும் சூழல் இருந்தது. இதனையடுத்து இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1 வாரத்தில் இப்பணிகள் நிறைவடையும் என்றனர்.






