search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவமழை கை கொடுத்ததால் மரவள்ளி விளைச்சல் அதிகரிப்பு
    X

    பருவமழை கை கொடுத்ததால் மரவள்ளி விளைச்சல் அதிகரிப்பு

    • தமிழ்நாட்டில் முதன்முதலாகச் சேலம் பகுதியில் தான் மரவள்ளிக் கிழங்குச் சாகுபடி செய்யப்பட்டது.
    • மரவள்ளிக்–கிழங்குகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்குகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்துக்கும் மரவள்ளிக் கிழங்குக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. தமிழ்நாட்டில் முதன்முதலாகச் சேலம் பகுதியில் தான் மரவள்ளிக் கிழங்குச் சாகுபடி செய்யப்பட்டது.

    மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

    தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ண கிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மரவள்ளிக்–கிழங்குகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்குகள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அங்கு மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டு 2 பருவமழையும் நல்ல முறையில் பெய்து, கை கொடுத்துள்ளது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கருக்கு மேல், மரவள்ளிக்–கிழங்குகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி நடக்கும். இது ஓராண்டு கால பயிராகும். பொதுவாக மரவள்ளிக்கிழங்கு விளைச்சலுக்கு பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படாது. 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினால் போதும். ஒரு ஏக்கருக்கு 5 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.

    தற்சமயம் அறுவடை செய்யப்பட்ட மரவள்ளிக்–கிழங்குகளை விவசாயிகள் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நடப்பாண்டில் பருவமழை நன்றாக கை கொடுத்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்தாண்டை விட இந்தாண்டு 20 சதவீதம் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே சமயம், கடந்த சில ஆண்டுகளாக மரவள்ளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை. சேகோ ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

    இதனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண, மரவள்ளிக்கிழங்குக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். மேலும் கப்பகிழங்கு (மரவள்ளி), கட்டஞ்சாயா (தேயிலை சுடுநீர்) ஆகியன கேரளா மக்கள் விரும்பி உண்ணும் பண்டமாகும். தமிழக மரவள்ளிக்கிழங்கு சுவை காரணமாக கேரளாவுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து 25 சதவீதம் கிழங்குகள் கேரளாவுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×