search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில்  இடைவிடாத மழையால்  1 லட்சம் ஏக்கரில் சம்பா அறுவடை பணிகள் பாதிப்பு
    X

    கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நனையாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

    தஞ்சையில் இடைவிடாத மழையால் 1 லட்சம் ஏக்கரில் சம்பா அறுவடை பணிகள் பாதிப்பு

    • தஞ்சை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இடையில் கன மழை பெய்வதும், சாரல் பொழிவதுமாக மாறி மாறி காணப்பட்டது.

    தஞ்சாவூா்:

    வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தஞ்சை, திருவையாறு, வல்லம், பாபநாசம், கும்பகோணம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்கிறது.

    தஞ்சையில் இன்று அதிகாலை 5 மணிக்கு லேசான சாரல் பொழிந்தது. அதன் பிறகு காலை 9 மணி முதல் மிதமான அளவில் மழை பெய்ய தொடங்கியது.

    இடையில் கன மழை பெய்வதும், சாரல் பொழிவதுமாக மாறி மாறி காணப்பட்டது. மதியம் 2 மணி வரை விட்டுவிட்டு மழை பெய்தது.

    இன்று மாலை மற்றும் இரவிலும் மழை பெய்வதற்கான சூழல் தென்படுகிறது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    தொடர்ந்து மழை பெய்ததால் தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று வழக்கத்தை விட குறைவான அளவிலே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதனால் பெரிய கோவில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது.

    தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வயலில் அறுவடை இயந்திரம் இறங்க முடியாத அளவுக்கு உள்ளது. மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது.

    அடுத்து சில நாட்கள் தொடர்ந்து வெயில் அடித்தால் மட்டுமே அறுவடை பணி தொடங்குவதற்கான சூழல் காணப்படும். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்படக்கூடிய அபாய நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனைப்பட்டனர்.

    இது தவிர கொள்முதல் பணிகளும் பாதிப்படைந்துள்ளன. ஏற்கனவே கொள்முதலுக்காக கொண்டு வந்த நெல்மணிகள் நனையாமல் இருக்க தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

    Next Story
    ×