search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைவிடாது கொட்டும் மழையால் போடிமெட்டு மலைச்சாலையில் காட்டாற்று வெள்ளம் - போக்குவரத்து பாதிப்பு
    X

    போடிமெட்டு மலைச்சாலையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்.

    இடைவிடாது கொட்டும் மழையால் போடிமெட்டு மலைச்சாலையில் காட்டாற்று வெள்ளம் - போக்குவரத்து பாதிப்பு

    • போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.
    • ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிள்ளையார்கோவில் அருகில் உள்ள தடுப்பணையில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

    கொட்டக்குடி ஆற்றை கடந்து விவசாய நிலங்களுக்கு செல்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மேலும் சிலர் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை போடிமெட்டு மலைச்சாலையை ஒட்டிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலைச்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவிபோல கொட்டியது.

    இந்த சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. இதனால் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. காட்டாற்று வெள்ளம் பாய்ந்த பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டுனர்கள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.

    போடி முந்தல் சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்துமாறு அவர்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.

    இதேபோல் கொடைக்கானலிலும் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரியில் படகுசவாரி முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொடைக்கானல், செண்பகனூர், அப்சர்வேட்டரி, வில்பட்டி, பிரகாசபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இரவு நேரங்களில் பெரும்பாலான வீதிகளில் மக்களின் கூட்டம் அடியோடு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×