search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், திருவோடு ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    தஞ்சையில், திருவோடு ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

    • ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.
    • திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு புளியக்குடியில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தற்போது உள்ள அங்காடியில் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் ரெயில்வே இருப்புப் பாதையை கடந்து நடந்து செல்ல வேண்டி உள்ளது.

    இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே வடக்கு தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேறாததால் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு

    புளியக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுசீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பகுதி நேர அங்காடி அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் திருவோடை தூக்கி தரையில் போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    அப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

    பொதுமக்களின் இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×