என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் பெண்ணை அடித்து கொன்ற தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை
- லட்சுமியை உருட்டுக் கட்டையால் தாக்கியதில் அவர் இறந்தார்.
- சித்ராவுக்கு, கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக, 3 மாதம் சிறை, 500 ரூபாய் அபராதம், தாக்கிய குற்றத்திற்காக ஓராண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த துடுக்கனஹள்ளி முத்தூரான் கொட்டாயை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). இவரது கணவர் திருப்பதி. இவர் கடந்த, 2016-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இவரது குடும்ப சொத்துக்களை திருப்பதியின் அண்ணன் கோவிந்தசாமி (55) பராமரித்து வந்தார். சொத்து பிரிப்பதில் லட்சுமியுடன் அவருக்கு பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் கோவிந்தசாமி அவரது மகன் சக்தி பராசக்தி (29), மருமகள் சித்ரா (26) ஆகியோர் லட்சுமியை உருட்டுக் கட்டையால் தாக்கியதில் அவர் இறந்தார்.
இது குறித்து கே.ஆர்.பி., அணை போலீசார் வழக்கு பதிந்த நிலையில் கோவிந்தசாமி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சுதா தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தசாமி அவரது மகன் சக்தி பராசக்தி ஆகியோருக்கு பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்காக, மூன்று மாத சிறை, 500 ரூபாய் அபராதம், ஆயுதங்களால் தாக்கிய குற்றத்திற்காக, 2 ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் கொலை குற்றத்திற்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்தார்.
சித்ராவுக்கு, கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக, 3 மாதம் சிறை, 500 ரூபாய் அபராதம், தாக்கிய குற்றத்திற்காக ஓராண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் இவர்கள் மூவரும் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தர விட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.






