என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு ஊர்வலம்
- சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது.
- ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நடந்த சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பஸ்கள், ஆட்டோக்களில் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பெங்களூரு சாலை வழியாக சாந்தி திருமண மண்டபம் அருகில் நிறைவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட அலுவலர் ஜாகீர்உசேன் முன்னிலை வகித்தார்.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமான கடந்த நவம்பர் 25-ந்தேதியன்று இந்திய குடியரசு தலைவரால் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது. மேலும், சர்வதேச மனித ஒற்றுமை தினமான டிசம்பர் 23-ந் தேதி வரை 3 வார காலம் இந்த விழிப்புணர்வு பணிகள் நடைபெற உள்ளது.
குழந்தை திருமணம் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றால் தனி நபர் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை தடை செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுளள அனைத்து வட்டாரங்கள், ஊராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் துண்டு பிரசுரங்கள், பேரணி, சுவர் விளம்பரம் நாடகம், குறும்படம் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இவ்வாறு கூறினார். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி, உதவி திட்ட அலுவலர்கள் பிரபாகர், சந்தோசம், ராஜீவ்காந்தி, பெருமாள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.






