என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

    • வாழ்ந்து காட்டுவோம் திட்டப்பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
    • கிராமப்புற தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதும், தொழில் குழுவின் செயல்பாடாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் இட்டிக்கல் அகரம், பெல்லாரம்பள்ளி, மோரமடுகு, சோக்காடி ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டப்பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

    அப்போது இட்டிக்கல்அகரம் கிராமத்தில் டைல்ஸ் ஓடு பதிக்க பயிற்சி முடித்த 20 இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் இணை மானிய நிதி திட்டத்தின் மூலம் கறவை பசு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேவகி ஆண்டியப்பனிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மோரமடுகு ஊராட்சியில் செயல்பட்டு வரும் சமுதாய பண்ணைப்பள்ளியில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் இருக்கும் 30 விவசாயிகளுக்கு மா உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு ஊராட்சியில் ஒரே மாதிரியான தொழிலை மேற்கொள்ளும் 15 முதல் 30 நபர்கள் கொண்டு தொழில் குழுக்களை உருவாக்கி, கிராமப்புற தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதும், தொழில் குழுவின் செயல்பாடாகும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மண்பானை, பனைவெல்லம், பால் பொருட்கள், உணவு பொருட்கள் தயாரிப்பு, ஆயத்த ஆட்டை தயாரிப்பு போன்ற தொழில்கள் மேற்கொள்ள 39 தொழில் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களுக்கு தொடக்க நிதியாக ஒரு குழுவிற்கு ரூ.75 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.29 லட்சத்து 25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் பயனடைந்த பயனாளிகள், மற்றவர்களுக்கு இந்த திட்டம் குறித்து எடுத்துரைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×