என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் வாலிபர் உள்பட 3 பேர் சாவு
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் வாலிபர் உள்பட 3 பேர் சாவு

    • சதீஸ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ஏரிகரை பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம் விளக்கல்நத்தம் குறிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சதீஸ்குமார் (வயது35). கூலித்தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் (36) என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஓசூர் சென்றனர். அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசியநெடுஞ்சாலை தொன்னையன் கொட்டாய் என்ற பகுதிக்கு வந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஸ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த வடிவேலை அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் மனோஜ்சிங் (30). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மனோஜ் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஒசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குருபரம்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (50). இவர் பஞ்சாயத்து குடிநீர் தொட்டி திறந்து விடும் டேங்க் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் தனது மொபட்டில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரிகரை பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கந்தி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×