என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
இருக்கூர் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
- பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
- பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டியபோது குடிநீர் பைப் லைன்கள் உடைந்துவிட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தார் சாலை விரிவாக்க பணியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். இந்நிலையில் தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் குழி தோண்டப்பட்டு வருகிறது. இதற்காக, பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டியபோது குடிநீர் பைப் லைன்கள் உடைந்துவிட்டது. இதனால் இருக்கூர் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இருக்கூர் ஊராட்சி, காலனி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வராததால் போர் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது மழை பெய்ததால், போர் தண்ணீரும் சேருகலந்த நீராக வருவதால், அதை குடிக்க முடியாமலும், சமையல் செய்ய முடியாமலும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக இருக்கூர் ஊராட்சிமன்றத் தலைவி ஜானகியிடம் காலனி மக்கள் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்து இருக்கூர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்தி செல்லும் தார் சாலையின் குறுக்கே அமர்ந்து இன்று காலை சுமார் 8 மணி அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரமத்தியிலிருந்து ஜேடர்பா ளையம் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்களும், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும், ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்தி செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்து பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்த தகவல் கபிலர்மலை வட்டார் வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் வெளியூரில் இருந்து வருவதால் உடனடியாக வர முடியவில்லை. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் பேசி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தனர்.
சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மிகவும் காலதாமதமாக சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






