search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளில் செயல்பாட்டை தொடங்கிய    மறுசீரமைப்பு மேலாண்மைக்குழு
    X

    கோப்புபடம்.

    அரசு பள்ளிகளில் செயல்பாட்டை தொடங்கிய மறுசீரமைப்பு மேலாண்மைக்குழு

    • அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    கொரோனாவால் 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. எனவே 1 முதல் 3-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகளுக்காக எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செயல் மற்றும் விளையாட்டு வழியில் கற்றாலும், அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாக பிரித்து பாடங்களை கற்று தருவதே இதன் அடிப்படை. பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நடைபெறும்போது ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் பெற்றோரிடம் எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்தும் மாணவர்களின் கற்றல் நிலை சார்ந்தும் பகிரப்பட வேண்டும்.வரும் 2025க்குள் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3-ம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கவும், எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு.

    இதன் மாதிரி வகுப்பறை செயல்பாடுகள் கல்வி தொலைக்காட்சியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று அந்த வாரத்தில் மாணவர்கள் அடைந்த கற்றல் விளைவு குறித்து அறிய வளரறி மதிப்பீடு மற்றும் இறுதியில் தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்.மேலும்எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக்கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்று கற்பதை பெற்றோர் அறியும் வகையில் வகுப்பறையை பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும். இதுகுறித்து பெற்றோர் கூட்டத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் செயல்பாடின்றி உள்ளது.உள்கட்டமைப்பு வசதி உட்பட எல்லா வகையிலும் அரசு பள்ளிகளை தன்னிறைவு பெறச்செய்ய தமிழகம் முழுவதும்அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்டமேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 89 அரசு, நகராட்சி உயர் நிலைப்பள்ளிகள், 76 உயர் நிலைப்பள்ளிகள் எனமொத்தம் 165 பள்ளிகளில் மேலாண்மை குழு பிரதிநிதிகள் பதவியேற்றனர்.இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,333 அரசு, நகராட்சி பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாரம் ஒருமுறையாவது பள்ளியை பார்வையிட வேண்டும். மாதம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசிக்கவேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசு, தன்னார்வலர்கள், தங்களது சுய பங்களிப்பு மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×