search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்   குழந்தைகளை அதிகம் பாதிக்கும் காய்ச்சல் பாதிப்பு
    X

    கோவையில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் காய்ச்சல் பாதிப்பு

    • எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.
    • 40 படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன.

    கோவை

    கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைப்பொழிவு குறைந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருவதால் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே சுகாதர துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளிக்கு வந்த 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் வாந்தி எடுத்துள்ளனா். இதனைத் தொடா்ந்து, பள்ளி நிா்வாகம் சாா்பில் சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    மாநகராட்சி நகா் நல அலுவலா் பிரதீப் வ.கிருஷ்ணகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வாந்தி எடுத்த மாணவா்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

    இது தொடா்பாக மாநகராட்சி நகா் நல அலுவலா் பிரதீப் வ.கிருஷ்ணகுமாா் கூறியதாவது:-

    மாணவிகள் 2 பேருக்கு காலையில் வீட்டில் இருந்து வந்த போதே காய்ச்சல் இருந்துள்ளது. இதனைத் தொடா்ந்து பள்ளிக்கு வந்தவுடன் வாந்தி எடுத்துள்ளனா். இதனைத் தொடா்ந்து, பள்ளியில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

    இதில் 834 மாணவா்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 8-ம் வகுப்பில் 9 பேருக்கு, 10-ம் வகுப்பில் 3 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடா்ந்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பின்னா் பள்ளியில் டெங்கு கொசுப்புழு அழிப்பு உள்ளிட்ட தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சாதாரண புளூ காய்ச்சல்தான். காய்ச்சல் இருந்தால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் ப்ளூ காய்ச்சல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளோம். ஒரே இடத்தில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அந்த இடம் ஹாட் ஸ்பாட் என அறிவிக்கப்படும். கோவையில் அதுபோன்ற நிலை இல்லை. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். வாந்தி பாதிப்பு ஏற்பட்ட மாணவிகளும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கபசுர குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் காய்ச்சல் பாதிப்புக்கு 62 குழந்தைகள் உள்நோயாளிகளாகவும், 739 பேர் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இந்த மாதம் 407 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது சிறியவர், பெரியவர் என 30 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புக்காக வரும் குழந்தைகளை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் 40 படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன.

    Next Story
    ×