search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் மூலம் ரூ.231 கோடி நிதி திரட்டிய சென்னை ஐ.ஐ.டி.
    X

    முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் மூலம் ரூ.231 கோடி நிதி திரட்டிய சென்னை ஐ.ஐ.டி.

    • கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகம் ஆகும்.
    • 2021-ம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி ரூ.101.2 கோடியாகும்.

    சென்னை :

    சென்னை ஐ.ஐ.டி., அதனுடன் இணைந்து செயல்படும் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.231 கோடியை 2022-23-ம் ஆண்டில் திரட்டியுள்ளது. சமூகம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதி ஆண்டில் திரட்டப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். நிதி திரட்டலை பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியை இப்போது பதிவு செய்துள்ளது. இதேபோல 2021-ம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி ரூ.101.2 கோடியாகும்.

    ரூ.1 கோடிக்கு மேல் இந்த கல்வி நிறுவனத்துக்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு திரட்டப்பட்ட மொத்த நிதியின் வளர்ச்சி விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தொகை அனைத்தும் முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும் பெறப்பட்டவையாகும். இதுதவிர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்புணர்வு திட்டம், மானியங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது.

    சென்னை ஐ.ஐ.டி.யின் வளர்ச்சிக்காக இந்தியா மற்றும் உலகளவில் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டும் ஏறத்தாழ ரூ.96 கோடி அளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, குறிப்பிட்ட பொருள் குறித்த ஆய்வுக்கான ஆராய்ச்சி பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று காரணமாக முந்தைய ஆண்டு நடைபெறாமல் இருந்த 'பேட்ச்' மாணவர்கள் சந்திப்பு கடந்த ஆண்டு நடந்தபோதும் நிதி பங்களிப்பு கிடைக்கப்பெற்றது.

    இதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி.யின் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், "சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பின் கல்வி பயிலும் மாணவர்கள் மீது காட்டும் அன்பும், பாசமும் நெகிழச்செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் அளித்து வரும் ஆதரவானது சர்வதேச அரங்கில் நமது வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அவர்களின் நீடித்த ஆதரவுடன் வரும் ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டி.யை இன்னும் மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.

    இதேபோல, சென்னை ஐ.ஐ.டி.யின் சமூகம் சார்ந்த திட்டங்கள் எவ்வாறு நாட்டுக்கு பயனளிக்கின்றன என்பது குறித்து, சென்னை ஐ.ஐ.டி. இன்ஸ்டிடியூசனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி கவிராஜ் நாயர் விளக்கினார்.

    Next Story
    ×