search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை  விற்றால் உரக்கடைகளின் உரிமம் ரத்து - அதிகாரிகள் எச்சரிக்கை
    X

    தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் உரக்கடைகளின் உரிமம் ரத்து - அதிகாரிகள் எச்சரிக்கை

    • உரம் விற்பனைக்கு மேற்பட்ட தனியார் விற்பனை கடைகள் உள்ளன.
    • சிறப்பு அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்வார்கள்.

    மடத்துக்குளம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், சாகுபடிக்கு தேவையான விதை, பூச்சிக்கொல்லி மருந்து, உரம் விற்பனைக்கு 75க்கும் மேற்பட்ட தனியார் விற்பனை கடைகள் உள்ளன.

    மேலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாகவும், உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் வினியோகிக்கப்பட்ட பப்பாளி விதைகள் போலியானது எனவும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் 3 வட்டார விதை மற்றும் உரம் விற்பனையாளர்கள், தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, விதைச்சான்று துறையினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது.

    இதில் போலி விதைகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளையும் விற்பனை செய்கின்றனர்.விவசாயிகள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் போது விளைபொருட்களில் நஞ்சுத்தன்மை அதிகரித்து மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதே போல் அந்தியூர் அருகே போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை விவசாயிகளால் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அத்தகைய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது. தற்போதும் வேப்பம்புண்ணாக்கில் கலப்படம் செய்கின்றனர். காலாவதியான விதைகளை விற்கின்றனர்.முளைப்புத்திறன் இல்லாத விதைகளால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். மிளகாய், கத்தரி, தக்காளி சாகுபடியில் மகசூல் பாதியாகி விட்டது.பயோ பெர்டிலைசர் என்ற பெயரில் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

    இதே நிலை நீடித்தால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் நஷ்டத்தால் சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர்.

    விதை சான்றுத்துறை துணை இயக்குனர் சுரேஷ்ராஜன் பேசியதாவது:- தற்போது விவசாயிகள் பெரும்பாலும் வீரிய ஒட்டு ரக விதைகளையே பயன்படுத்துகின்றனர். எனவே விதை விற்பனையில் ஈடுபடுபவர்கள், உற்பத்தியாளர்களிடம் விதை வாங்கும் போது அனைத்து அம்சங்களையும் சரிபார்த்து வாங்க வேண்டும்.

    துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    1967ல் உருவாக்கப்பட்ட விதை சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது புதிய விதை சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது.எனவே வட்டார வாரியாக வேளாண் உதவி இயக்குனர்களே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

    திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் பேசியதாவது:- விதை, உரம் விற்பனையாளர்கள், சட்டத்தின் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.புதிதாக விதைகளை அறிமுகப்படுத்தும் போது தரம் குறித்த பரிசோதனைகளை செய்வது அவசியம்.தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை எழுதி வைத்து கொண்டு விற்பனையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.அனைத்து கடைகளிலும் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு கடை விலை வித்தியாசம் இருக்கக்கூடாது.

    பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலுக்கு பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு தேவையாகும். எனவே வரும் காலங்களில் இதுசார்ந்த பட்டயப்படிப்பு படித்து முடிப்பவர்களுக்கே விதை மற்றும் உரம் விற்பனைக்கான உரிமம் வழங்கப்படும்.

    விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்வார்கள். விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எவ்விதமான நேரடி தொடர்பு இல்லாமல் நடவடிக்கைகள் குறித்து தபாலில் மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே விற்பனையாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றாவிட்டால் பாரபட்சம் இல்லாமல் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார். தொடர்ந்து வேளாண் இணை இயக்குனர் தோட்டக்கலை சுரேஷ்ராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி நன்றி கூறினார். இதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார விதை, உரம் விற்பனையாளர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×