என் மலர்
உள்ளூர் செய்திகள்

`தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் நேசிக்கிறேன்': நெல்லை வாலிபரை கரம்பிடித்த வியட்நாம் இளம்பெண்
- தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த இனத்தை சேர்ந்தவர்கள்.
- தமிழரின் பண்பாடு உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு.
நெல்லை:
உலக மொழிகளில் தொன்மை வாய்ந்த மொழி தமிழ். இதனை தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த இனத்தை சேர்ந்தவர்கள். பாரம்பரிய பெருமை உடையவர்கள்.
தமிழரின் பண்பாடு உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு. அதனால் தான் வெளிநாட்டினரும் தமிழ் கலாசாரத்தை நேசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு விழாக்களி லும் தமிழர்கள் பின்பற்றும் கலாசாரங்கள், நடைமுறைகள் இன்றளவிலும் வெளிநாட்டினரை ஈர்த்து வருகிறது. தமிழனின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு கடல் கடந்து வந்து காதலித்து தமிழனை திருமணம் செய்த பெண்கள் ஏராளம்.
அந்த வகையில் தான் நேற்று நெல்லை டவுனை சேர்ந்த ஒரு தமிழ் இளைஞரை வியட்நாம் நாட்டை சேர்ந்த இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்-வாசுகி தம்பதியினர். இவர்களது மகன் மகேஷ் (வயது 35). இவர் பட்டப்படிப்பு படித்து முடித்து வியட்நாமில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அதே நிறுவனத்தில் வியட்நாம் நாட்டு இளம்பெண்ணான நுயென் லே துய் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் காதலாக மாறியது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள 2 பேரும் முடிவு செய்துள்ளனர்.
இதனால் இருவரது பெற்றோரிடமும் தங்களது காதலை தெரிவிக்கவே, அவர்களும் பச்சைக்கொடி காட்டியுள்னர். மகிழ்ச்சியில் திளைத்த காதல் ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்தபோது தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று நுயென்லே துய் தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த மணமகன் மகேஷ் மகிழ்ச்சியுடன் தனது காதலியையும், காதலியின் தாயாரையும் நெல்லைக்கு அழைத்து வந்துள்ளார்.
நெல்லை டவுன்-குற்றாலம் சாலையில் உள்ள கோவிலில் வைத்து இருவ ருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து திரளான உறவினர்கள் வந்து வாழ்த்து தெரிவித்த னர். வெளிநாட்டு பெண் என்ற தகவலை கேள்விப் பட்டு, அவரை பார்ப்ப தற்காகவே ஒரு கூட்டம் அங்கு அலைமோதியது.
இந்த திருமணம் குறித்து மணப்பெண் நுயென்லே துய் கூற ஆரம்பித்தபோது எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறிதான் பேச ஆரம்பித்தார். அவரது அழகான தமிழ்பேச்சை கேட்டு அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இன்று எனக்கு திருமணம். நான் இப்போது இந்திய கலாச்சாரப்படி புடவையில் உள்ளேன். தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்துள்ளது. அதன்படி எனக்கு திருமணம் நடந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களையும், தமிழ் நாட்டையும் மிகவும் பிடித்து உள்ளது. இரண்டையும் நான் நேசிக்கிறேன் என்று ஆங்கிலத்தில் கூறினார்.






