search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை புலியை பிடிப்பது எப்படி? வனத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மீண்டும் ஆலோசனை
    X

    அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சிறுத்தை புலியை பிடிப்பது எப்படி? வனத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மீண்டும் ஆலோசனை

    • கடந்த 31-ந் தேதி பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூர் கிராமத்திற்குட்பட்ட செஞ்சுடையாம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கிறது என தகவல் பெறப்பட்டது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிரணிகளான நாய் போன்றவைகளை சிறுத்தை புலி தாக்கி கொன்றது. இந்த தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உட்பட வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தார்கள்.
    • சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பதிவிடும் நபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருக்கூர் பகுதியில் கால்நடைகளை கொன்று குவிக்கும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறை மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ஜினீயர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 31-ந் தேதி பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூர் கிராமத்திற்குட்பட்ட செஞ்சுடையாம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கிறது என தகவல் பெறப்பட்டது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் மற்றும் செல்லப் பிரணிகளான நாய் போன்றவைகளை சிறுத்தை புலி தாக்கி கொன்றது.

    இந்த தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உட்பட வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 5-ந் தேதி இருக்கூர்

    கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தேன். வனத்துறை சார்பில் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சிறுத்தை புலியை பிடிப்பதற்கு, 2 கூண்டுகள் மற்றும் 4 விலங்குகள் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன் கேமரா மூலமாக சிறுத்தை புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இச்சிறுத்தை புலியை தேடும் பணியில் 42 வனத்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறுத்தை புலியை பிடிக்கும் பணியில் நுட்பம் தெரிந்த விலங்குகளை கண்காணிக்கும் 3 மலைவாழ் கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர்.

    இது மட்டுமின்றி வன உயரடுக்கு படையை சேர்ந்த 4 நபர்கள், கோயம்புத்தூர் மற்றும் வைகை அணை பகுதியிலிருந்து சிறுத்தை புலியை பிடிப்பதற்கு நவீன தொழில் நுட்ப கருவிக ளுடன் வந்து உள்ளனர். 2 வனத்துறை கால்நடை மருத்துவர்களும் சிறுத்தை புலியை பிடிப்பதற்கான பணியில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

    சிறுத்தை புலியை பிடிப்ப தற்கு வனத்துறை சார்பில் அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. பாதச்சுவடு மூலம் சிறுத்தை புலியின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதற்கும், கூண்டுகளை அதிகப்படுத்துவதற்கும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறுத்தை புலி நடமாடும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்த

    வழிமுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை பதிவிடும் நபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடிவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் கபிலர் மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பா.ஜ.க மாவட்ட துணைச் செயலாளர் பழனியப்பன், தலைமை வனப் பாதுகாப்பு அலுவலர் (திருச்சி மண்டலம்) சதீஸ், சேலம் மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஆர்.ஷஷாந்த், வனத்துறை கால்நடை மருத்துவர்கள் (ஓய்வு) மனோகரன், பிரகாஷ் , கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், துரைசாமி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து விரைந்து சிறுத்தை புலியை பிடிக்க கோரி, பா.ஜ.க.வினர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் மனு கொடுத்தனர்.

    Next Story
    ×