என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் போலீசிடமிருந்து தப்பியவர்  கூட்டாளிகளுடன் கைது
    X

    கிருஷ்ணகிரியில் போலீசிடமிருந்து தப்பியவர் கூட்டாளிகளுடன் கைது

    • போலீசாரை கேலி, கிண்டல் செய்தும் வீடியோ க்களை வெளியிட்டார்.
    • 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெரு கொத்தபேட்டா காலனியை சேர்ந்தவர் அசோக் (வயது 22). பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் அசோக் மீது மகாராஜகடை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த 11-ந் தேதி பழையபேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே வினோத்குமார் (24) என்பவரிடம் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தகராறு செய்து தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அசோக்கை போலீசார் தேடி வந்த நிலையில் அசோக் சமூக வலைத்தளங்களில் புகைப்பிடிப்பது, நானும் ரவுடி தான் என என்று மிரட்டுவது, துப்பாக்கியை இடுப்பில் சொருகி இருப்பது போன்று வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

    மேலும் அரசு பஸ்சை தீ வைத்து கொளுத்துவேன் எனவும், போலீசாரை கேலி, கிண்டல் செய்தும் வீடியோ க்களை வெளியிட்டார்.

    இதையடுத்து கிருஷ்ண கிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அசோக்கை கைது செய்தனர். பின்னர் அவரை, காவல் நிலையத்தில் உட்கார வைத்து, இனிமேல் இதுபோல் தவறு செய்யமாட்டேன் என பேச வைத்து அந்த வீடியோவையும் போலீசார் பதிவு செய்தனர்.

    இதனிடையே கைது செய்யப்பட்ட அசோக்கை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த அசோக் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் அசோக்கை தேடி வந்தனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மலைப்பகுதியில் அசோக் தனது நண்பர்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று அசோக் மற்றும் அவரது நண்பர்கள் பழையபேட்டை பெங்காலி தெருவை சேர்ந்த மின்சார கண்ணன் (22), அரவிந்தன் (25), கொத்தபேட்டா காலனியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (24), ஜெய்கபிலன் (22), மகாதேவன்(22) மற்றும் 16 வயது பள்ளி மாணவன் ஆகிய 6 பேரையும் வளைத்து பிடித்தனர்.

    அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அசோக், போலீசார் என்னை அவமானப்படுத்தி விட்டனர். அதனால் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு நாம் யார் என்று போலீசுக்கு காட்ட வேண்டும்? என திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அசோக் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×