search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் புகார்- தலைமறைவான பாதிரியார் கைது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாலியல் புகார்- தலைமறைவான பாதிரியார் கைது

    • பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
    • தேவாலயம் வரும் பெண்களிடம் ஆதரவாக பேசி, அவர்களை தன் வலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வீழ்த்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 27), பாதிரியார்.

    தக்கலை அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிய இவர், அங்கு வரும் பெண்களிடம் தகாத முறையில் பேசி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், போட்டோக்கள் மற்றும் சாட்டிங் வாசகங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    பெண்ணுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது, நிர்வாண நிலையில் படுத்தபடி வீடியோ காலில் பேசுவது போன்றவை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாகி விட்டார்.

    அவர் பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அவர்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் கொடுத்தார்.

    இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். அவர்கள், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 80-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் பெண்களுடனான போட்டோக்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் சில வீடியோக்கள் அழிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை ரெகவரி சாப்ட்வேர் மூலம் மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். பல்வேறு குறைகளை சொல்லி தேவாலயம் வரும் பெண்களிடம் ஆதரவாக பேசி, அவர்களை தன் வலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வீழ்த்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர், கேரளா அல்லது பெங்களூருவுக்கு தப்பியிருக்கலாம் என்ற தகவலின் பேரில் தனிப்படையினர் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கோர்ட்டில் சரண் அடைய திட்டமிடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோர்ட்டுகளையும், போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் ஆய்வுக்கு வந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த வழக்கின் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை உடனடியாக பிடிப்பது தொடர்பாக அதிரடியாக போலீசாருக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    அதன்பேரில் பாலமுருகன், திருமுருகன், கிறிஸ்டி உள்பட 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    மேலும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போன் சிக்னல்கள் மூலம் அவரது நடமாட்டத்தையும் கண்காணித்தனர். இந்த நிலையில் இன்று காலை பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவிலில் பதுங்கியிருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது.

    இன்று காலை அங்கு அதிரடியாக சென்ற தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுடன் எத்தனை பெண்கள் தொடர்பில் இருந்தனர்? அவர்களுடனான ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை செல்போன், லேப்டாப்களில் பதிவு செய்தது ஏன்? அவை சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? என்பது குறித்து போலீசார் அவரிடம் கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு வேறு யாரும் உடந்தையாக செயல்பட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×