என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை முதல் விசர்ஜனம்
- மாநகரில் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
- விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுவதால் நாளை முதல் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள் மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாநகரில் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் இந்து முன்னனி சார்பில் 308 விநாயகர் சிலைகளும், இந்து மக்கள் கட்சி (தமிழகம்) 120, பாரத்சேனா 40 மற்றும் இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் மொத்தம் 538 சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதுபோன்று புறநகர் பகுதிகளில் 1,556 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2094 சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை முதல் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
இந்த சிலைகள் குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளங்களில் மற்றும் குனியமுத்துர், போத்தனூர் பகுதியில் உள்ள குளங்களிலும் புறநகர் பகுதிகளில் உள்ள சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள், ஆறுகளிலும் கரைக்கப்பட உள்ளன.
இதையடுத்து கோவையில் நாளை (வெள்ளிக்கிழமை) விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் காலை முதல் இரவு வரை நகரில் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலம் நாளை மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோவிலில் இருந்து புறப்பட்டு குனிய முத்தூர்-பாலக்காடு ரோடு வழியாக குனிய முத்தூர் குளத்தில் கரைக்கப்பட உள்ளது.
இதேபோன்று மதியம் 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஊர்வலம் ஆரம்பித்து, சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோடு சென்று குறிச்சி குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
இந்த விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு கோவையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாநகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது.
சாலைகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல இருப்பதால் ஊர்வலப் பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதைத் தவிர்த்து போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க போலீசார் கேட்டுெகாண்டனர்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நேரிடாமல் தடுக்கும் விதமாக மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் வரையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.






