search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் விளையும் காலா ரக ஆப்பிள்கள்- தோட்டக்கலைத்துறை ஊக்குவிக்க வேண்டுகோள்
    X

    நீலகிரியில் விளையும் காலா ரக ஆப்பிள்கள்- தோட்டக்கலைத்துறை ஊக்குவிக்க வேண்டுகோள்

    • ஜம்மு-காஷ்மீரில் இருந்து 2000 ரக நாற்றுகளை கொள்முதல் செய்து நடவு
    • நீலகிரி மாவட்டத்தில் காலா, ஜெரோமின், ஆப்பிள் ரகங்கள் விளைவதற்கு உகந்த சீதோஷ்ண சூழ்நிலை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலைக்காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் தேயிலைக்கு மார்க்கெட்டில் உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் பருவ நிலை மாற்றம் காரணமாக மலைக்காய்கறி விவசாயத்திலும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குன்னூர் அறைஹட்டி பகுதியை சேர்ந்த பத்மநாபன் மற்றும் ஒருசில விவசாயிகள் ஒருங்கிணைந்து காஷ்மீர் மாநிலத்தில் விளையும் காலா வகையை சேர்ந்த ஆப்பிள்களை பயிரிடுவதென முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு சுமார் 2000 காலா ரக ஆப்பிள் மரநாற்றுகளை கொள்முதல் செய்தனர்.

    தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், குக்குச்சி, கூக்கல்தொரை, கிண்ணக்கொரை, கூடலூர் ஆகிய பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. அவை தற்போது நன்றாக வளர்ந்து உள்ளன. அந்த மரங்களில் காஷ்மீரின் காலா வகை ஆப்பிள்கள் விளைந்து தொங்குகின்றன.

    இதுகுறித்து குன்னூர் விவசாயி பத்மநாபன் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் சாகுபடிக்கு மாற்றாக காஷ்மீர் ஆப்பிள் வகைகளை சோதனை அடிப்படையில் விளைவிப்பதென முடிவு செய்தோம். அதன்படி காஷ்மீரில் இருந்து காலா வகை ஆப்பிள் இனத்தை சேர்ந்த 2000 நாற்றுகளை வாங்கி வந்து பயிரிட்டோம். அது தற்போது நன்றாக விளைந்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் காலா, ஜெரோமின், கோலட், கிங்ராட், ஹேடம் ஆகிய ஆப்பிள் ரகங்கள் விளைவதற்கு உகந்த சீதோஷ்ண சூழ்நிலை உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் ஆப்பிள் உற்பத்தியை அதிகளவில் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×