search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுய உதவிக்குழு பெயரில் - கிராமப்புற மக்களை கடனாளியாக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்
    X

    கோப்பு படம்

    மகளிர் சுய உதவிக்குழு பெயரில் - கிராமப்புற மக்களை கடனாளியாக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்

    • 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்தால் அவர்களுக்கு பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தாமாக முன் வந்து நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குகிறது.
    • போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழுவாக சேர்ந்து பெண்கள் தொழில் தொடங்கி அதன் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள இந்த தொகை பெரிதும் உதவியாக இருந்து வந்தது.

    ஆனால் காலப்போக்கில் குடும்ப செலவுக்காக குழு அமைத்து பெண்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்தால் அவர்களுக்கு பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தாமாக முன் வந்து நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குகிறது.

    பணம் கொடுக்கும் போது கணவன்-மனைவி 2 பேரின் ஒப்புதலோடு வழங்கப்படுவதால் தொகை வசூலிக்கும் போது வீட்டில் வந்து பணம் கொடுக்கும் வரை இருந்து நிதி நிறுவன ஊழியர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    கடனை செலுத்த முடியாத போது மற்றொரு நிறுவனத்தில் கடன் பெற்று அடைத்து விடுகின்றனர். அந்த நிறுவனத்துக்கும் கடனை செலுத்த முடிய வில்லை என்றால் வேறு ஒரு நிறுவனத்தில் கடனை பெற்று விடுகின்றனர்.

    இதனால் அவர்கள் மேலும் மேலும் கடனாளியாகி மன அழுத்தத்துக்கு உள்ளாகி விடுகின்றனர். அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதில் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு குடும்பத்தில் ஒருவர் கடன் பெற்றிருந்தால் மீண்டும் வேறொரு வங்கியில் அவருக்கு கடன் வழங்க முடியாது. ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கிராமப்புற மக்களிடம் தாராளமாக கடன் உதவியை வழங்கி விடுகின்றனர்.

    இதனால் தினசரி வீட்டு வாசல் முன்பு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை கேட்டு வந்து விடுகின்றனர். ஒரு குழுவில் ஒருவர் பணம் கட்ட வில்லையென்றாலும் மொத்த உறுப்பினரும் அதற்கு பொறுப்பாளியாக மாற்றப்படுகிறார்கள். பணம் கிடைக்கும் வரை இரவு 8 மணி ஆனால் கூட வாசலிலேயே அமர்ந்து வசூல் செய்து செல்கின்றனர்.

    ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்லும் நிலையில் அவரது தலையில் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் கடன் திணிக்கப்படு கிறது. கடனை கொடுக்க முடியாமல் வெளியூர் சென்று விடுவதும் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்வதும் நடந்து வருகிறது.குறிப்பாக கிராமப்புற மக்களிடம் மட்டுமே இது போன்ற கடன் உதவியை தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.

    போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மட்டும் காவல் துறை இது போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    Next Story
    ×