என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலையூர் காடு, மூலக்காடு உள்ளிட்ட 5 கிராமப்பகுதிகளுக்கு புதிய சாலை போடப்பட்டால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் -போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டவட்ட அறிவிப்பு
- அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.
- சாலை சீரமைக்கப்படாமல் அப்பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனுர், குறுக்கு பள்ளம் உள்ளிட்ட ஐந்து கிராமப் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கிருந்து தினமும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதியும், சாலை வசதியும் இல்லாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.
இந்த கிராமங்களுக்கு செல்லும் சுமார் எட்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட முக்கிய சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து சேதமாகி தார் சாலை முழுவதும் தரமற்ற மண் சாலையாக மாறிவிட்டது. தொடர்ந்து அதே சாலையில் அரசு பேருந்துகளும் பயணித்து வந்தன.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடியாத தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து வந்த வழித்தட எண் 24, 8, 10 அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.
இப்பகுதியில் இருந்து மலையூர் காட்டிற்கு செல்லும் சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து வசதிக்காக இரண்டு மாதங்களாக தவித்து வருகின்றனர்.
இது குறித்து மாலைமலர் நாளிதழில் விரிவான செய்தி கடந்த 3-ந்தேதி வெளியானது.இந்நிலையில் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளை மீண்டும் சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் சாலை சீரமைக்கப்படாமல் அப்பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.எனவே இப்பகுதி மக்களின் தேவைக்கான தீர்வு மாவட்ட நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது.






