search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • தங்கள் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம்.
    • தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த உயரம் 52 அடியாகும் (1666.26 மில்லியன் கன அடி). நேற்று (29ம் தேதி) நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 48.25 அடியாக (1262.11 மில்லியன் கனஅடி) உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 456 கன அடி தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் உபரிநீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே பொதுமக்கள், ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம். அதே போல தங்கள் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம். குளிப்பதற்கோ, காலை கடன்களை கழிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ ஆற்றுக்கு செல்ல வேண்டுமா எனவும் எச்சரிக்கப்படுகிறது.

    மேலும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கிருஷ்ணகிரி அணை இடதுபுறம் நீட்டிப்பு பாளேகுளி - சந்தூர் ஏரி பாசன விவசாயிகள் சங்க பயனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவகுரு கூறியது, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பாலேகுளி ஏரி முதல் வேலம்பட்டி, வீரமலை வழியாக சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

    தற்போது, அணையில் இருந்து இடது புறக்கால்வாய் வழியாக உபரிநீர் பாலேகுளி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். பின்னர், அங்கிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் கால்வாய் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    Next Story
    ×