search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி  குப்பை கிடங்கில் தீ- குடியிருப்பு பகுதியை புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மறியல்
    X

    ஆறுமுகநேரி பேரூராட்சி எதிரே குப்பை கிடங்கில் நவீன எந்திரங்கள் மூலம் குப்பை அகற்றப்படும் காட்சி.

    ஆறுமுகநேரி குப்பை கிடங்கில் 'தீ'- குடியிருப்பு பகுதியை புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மறியல்

    • அனைத்து வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து வர 23 வாகனங்கள் இயங்கி வருகின்றன.
    • ஆறுமுகநேரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய பேரூராட்சி ஆகும்.

    18 வார்டுகளிலும் இங்கு அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே ஒரு ஏக்கர் பரப்பளவில் நீண்ட காலமாக கொட்டப்பட்டு வந்தது.இதனால் அப்பகுதி சுகாதாரக் கேடு நிறைந்ததாக காணப்பட்டது.

    இதனால் இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்றும், வேறு இடத்தில் புதிதாக குப்பை கிடங்கை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து கலாவதி கல்யாணசுந்தரம் தலைவராகவும், தி.மு.க. பிரமுகரான கல்யாண சுந்தரம் துணை தலைவ ராகவும் பொறுப்பு ஏற்றனர். இவர்களின் தீவிர முயற்சியால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் நவீன எந்திரங்களின் மூலம் குப்பையை அகற்றும் பணிக்காக ரூ.1.44 கோடி செலவிலான திட்டத்தை செயலுக்கு கொண்டு வந்தனர்.

    இதன்படி அங்கு குப்பைகளை பிரித்தெடுத்து உரமாக மாற்றப்பட்டு வருகிறது.இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    அனைத்து வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து வர லாரிகள், டிராக்டர்கள், மினி வேன்கள், பேட்டரி வாகனங்கள் என மொத்தம் 23 வாகனங்கள் இயங்கி வருகின்றன.மேலும் நிரந்தர பணியிலும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 60 பேர் செயல்பட்டு வருகின்றனர்.ஒருங்கிணைந்த இந்த தூய்மை பணியில் தினம்தோறும் மலை அளவிற்கு சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கே கொட்டுவது என்பதுதான் புதிய பிரச்சினையாக உள்ளது.

    ராணிமகாராஜபுரம் அருகே காட்டுப்பகுதியில் சில நாட்கள் குப்பைகள் கொட்டப்பட்டன.ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்களை மறித்தனர்.

    இதன் பின்னர் அடைக்கலாபுரம் அருகே ஒதுக்குப்புறத்தில் குப்பைகள் போடப்பட்டன.இதற்கும் எதிர்ப்பு எழுந்ததால் ஆறுமுகநேரி 4-வது வார்டு குளக்கரை அருகே குப்பைகளை போடும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இப்படியாக 10 நாட்களில் குப்பை கொட்டும் இடங்களை மக்கள் பந்தாடியதால் என்ன செய்வது என்று தெரியாமல் பேரூராட்சி நிர்வாகம் திக்குமுக்காடியது.

    இதனிடையே 4-வது இடமாக ஆறுமுகநேரி ரெயில் நிலையம் செல்லும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.இந்த நிலையில் நேற்று மதியம் அந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது.

    இதனால் செல்வ ராஜபுரம் பெரியான்விளை, கீழசண்முகபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகள் புகைமண்டலமாக மாறியது.இது சிறுவர்கள், பெரியோர்கள் என அனைத்து தரப்பினரை யும் அவதிப்பட வைத்தது.

    இதனால் செல்வராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து முடங்கியது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இதனிடையே திருச்செந்தூரில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு குப்பை கிடங்கில் பரவிய தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

    ஏற்கனவே ஆறுமுகநேரி பேரூராட்சியின் சார்பில் நவீன முறையிலான குப்பை கிடங்கு அமைப்பதற்காக புதிய இடத்தை தேர்வு செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி விரைவில் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×