search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் உள்ள கண்மாய்களை நிரப்ப விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    வறண்டு கிடக்கும் கண்மாயை படத்தில் காணலாம்.

    சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் உள்ள கண்மாய்களை நிரப்ப விவசாயிகள் வலியுறுத்தல்

    • திண்டுக்கல், வேடசந்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட 4 தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக குடகனாறு அமைந்துள்ளது.
    • மழைநீரை இப்பகுதி கண்மாய்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    நிலக்கோட்டை:

    தமிழகத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒன்றாக திகழ்வது கொடைக்கானல், பன்றிமலை, பண்ணைக்காடு, பெரும்பாறை, ஆடலூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் சேர்ந்து குடகனாறு உற்பத்தியாகி ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் சேர்கிறது.

    திண்டுக்கல், வேடசந்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட 4 தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக குடகனாறு அமைந்துள்ளது.

    இந்தக் குடகனாறு ஆற்றின் தென்பகுதி கன்னிமார் கோவில் அருகே தொடங்கும் ராஜவாய்க்கால் மூலமாக கிடைக்கும் மழைநீர், மழை காலங்களில் நரசிங்கபுரம் குளம், போடிகாமன் வாடி கண்மாய், செங்கட்டாம்பட்டி கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் ஆண்டுதோறும் நிரம்பி வருகிறது.

    செங்கட்டாம்பட்டி கண்மாயை அடுத்துள்ள சீத்தாப்புரம் பாப்பன்குளம், குளத்துப்பட்டி பெரியகுளம், நிலக்கோட்டை கொங்கர் குளம், கண்மாய்களுக்கு இந்த ஆற்றின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற தண்ணீரின் மூலம் கண்மாய்கள் நிரம்பியது. ஆனால் சிலுக்குவார் பட்டி ஊராட்சியில் உள்ள மன்னவராதி கண்மாய்,

    பாப்பன்குளம், பொன்னன் குளம் உள்ளிட்ட கண்மாய்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு கிடக்கிறது. இந்தப் பகுதி கண்மாய்களை நிரப்ப கோரி கிராம மக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனித சங்கிலி போராட்டம், சாலைமறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள்.

    அதோடு மட்டுமல்லாமல் இக்கிராம ஊராட்சியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் சுவை மாறி உப்புத் தண்ணீராக மாறி விட்டது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழ் சென்று விட்டது. எனவே இப்பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தற்போது பெய்து வரும் மழை நீரை எந்த வகையிலும் வீணாகாமல் வாய்க்கால் வழியே ராஜ வாய்க்கால் மூலமாக கிடைக்கப்பெறும் மழைநீரை இப்பகுதி கண்மாய்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    இதுகுறித்து சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கூறியதாவது:-

    சிலுக்குவார்பட்டி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கண்மாய்கள் மன்னவராதி, பாப்பன்குளம், பொன்னன் குளம் மற்றும் சிறுசிறு குட்டைகள் உட்பட அதிக குளங்கள் உள்ளது. இந்த கண்மாய்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மழை இல்லாததாலும், தொடர்ந்து ராஜ வாய்க்கால் தண்ணீர் கிடைக்கப் பெறாததால் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது.

    இதனால் விவசாயம் செய்வதற்கான வழி இல்லாமல் இங்கிருந்து கிராம மக்கள் ஏராளமானோர் பஞ்சம் பிழைக்க வெளியூர்களுக்கு சென்று விட்டனர். எனவே இக்கிராமம் செழிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தற்போது பெய்து வரும் மழை நீரை முழுமையாக வீணாகாமல் மேல் உள்ள கண்மாய்களை நிரப்ப முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    ராஜ வாய்க்கால் என்பது பல தலைமுறையாக எங்கள் கிராம பகுதிகளுக்கும் நிலக்கோட்டை பகுதியில் ஒன்றிய பகுதியில் பல இடங்களில் கண்மாய் நிரப்புவதற்கு மிகுந்த உதவியாக அமைந்துள்ளது. எனவே ராஜா வாய்க்காலில் இருந்து நிலக்கோட்டை வரை சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×