search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை நடவு முடியும் வரை ஆறுகளில் முழு அளவு தண்ணீர் திறக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
    X

    குறுவை சாகுபடிக்காக வயலை உழுது தயார் செய்யும் பணி

    குறுவை நடவு முடியும் வரை ஆறுகளில் முழு அளவு தண்ணீர் திறக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

    • உழவு பணிகள் நடைபெற்ற வயல்களில் ஆங்காங்கே களைகளை அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த ஆண்டு பூதலூர் பகுதியில் குறுவை நடவு செய்யாமலேயே சான்று பெற்று உரங்களை வலிமை வாய்ந்த விவசாயிகள் பெற்று சென்று விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் பகுதியில் மேட்டூர் அணை திறந்து அதில் இருந்து வந்த தண்ணீர் கல்லணைவந்தடைந்து, கல்லணையில் இருந்து பிரதான ஆறுகளில் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கிளை ஆறுகளில் மற்றும் வாய்க்கால்களில் திறக்கப்பட்டு, குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    குறுவை சாகுபடியை சிலர் பாய் நாற்றங்கால் மூலம் இயந்திர நடவு பணிகளிலும், பலர் நாற்றங்காலில் விதைப்பு செய்து அதை பறித்து நடவு செய்யும் பணிகளிலும் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பூதலூர் ஆனந்த காவேரி பாசனப்பகுதியில் உள்ள விவசாயிகள் முன்கூட்டியே நாற்றுவிட்டவர்கள் நடவு பணிகளைமுடித்துள்ளனர்.கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து நாற்று விட்டவர்கள்

    தற்போது தங்கள் வயல்களை நடவு செய்வதற்கு ஏற்றவாறு பண்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனந்த காவேரி பாசனப்பகுதியில் உள்ள வயல்களில் எங்கு நோக்கினும் டிராக்டர்கள் மூலம் உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன.உழவு பணிகள் நடைபெற்ற வயல்களில் ஆங்காங்கே களைகளை அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர. வயல்வரப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஆண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டுள்ளதாகவும். இன்னமும் உரம் வழங்கபடவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று வழங்க முடியும் என்று சொல்வதால் உரம் கிடைக்காத நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டு பூதலூர் பகுதியில் குறுவை நடவு செய்யாமலேயே சான்று பெற்று உரங்களை வலிமை வாய்ந்த விவசாயிகள் பெற்று சென்று விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தஞ்சை மாவட்ட கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி குறுவை தொகுப்பு திட்ட பயன்கள் குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளனர். யூரியா உரம் கிடைப்பது சிரமமாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    காம்ளக்ஸ் உரம் வாங்கினால் யூரியா தருவதாக தனியார் வியாபாரிகள் தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். உர விற்பனை யாளர்கள்மொத்தமாக யூரியா கொள்முதல் செய்ய முற்படும் போது காம்ளக்ஸ் உரம் வாங்க வேண்டும் என்று உர நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதாக கூறுகின்றனர்.

    இது போன்ற சூழ்நிலையில் விவசாயிகளை நிம்மதியாக விவசாயம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதற்கிடையே ஜுன் 15ம் தேதி காவிரி மற்றும் வெண்ணாற்றில் 6நாட்களுக்கு மாறி மாறி தண்ணீர் குறைந்த அளவில் திறக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி காவிரியில் குறைந்த அளவு 714கன அடியும் வெண்ணாற்றில் 6514கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கிளை வாய்க்கால்கள் கடைமடை பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் குறுவை நடவு பணிகள் தாமதம் அடையும் வாய்ப்பு உள்ளது. கல்லணை கால்வாயில் தற்போது வரை முழு அளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.தற்போது 1901கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குறுவை நடவு முடியும் வரை அனைத்து ஆறுகளிலும் முழு அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×