search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம்
    X

    முன்பட்ட குறுவை அறுவடை பணி

    முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம்

    • கல்லணையில் இருந்து இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நல்ல வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 89,599 கன அடியாக உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 88 ஆயிரத்து 887 கனஅடியாக பராமரிக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93. 470 டிஎம்சி ஆகவும் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் உள்ளது.

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் 41 ஆயிரத்து 112 கனஅடியும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 693 கன அடியும் திறந்து விடப்படுகிறது.கல்லணையில் இருந்து இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.காவிரியில் 8,506 கன அடி, கல்லணை கால்வாயில் 3221 கன அடியும், கொள்ளிடத்தில் 23890 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

    கொள்ளிடத்தில் நேற்று மாலை 1.36 லட்சம் கன அடி தண்ணீர் ஓடிக்கொண்டுள்ளது. இதனால் வடுவகுடி, மரூர், ஆச்சனூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள நெல்வயல்கள், வாழையில் புகுந்த தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நல்ல வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் முன்பட்டகுறுவை சாகுபடி செய்து உள்ள கிராமங்களில் அறுவடை எந்திரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மழை இல்லாமல் இருந்தால் இன்னும் சில நாட்களில் முன்பட்ட அறுவடை நிறைவடையும் நிலையில் அறுவடை இயந்திரங்கள் குவிந்து உள்ளன. அறுவடை இயந்திரங்கள் குவிந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த போதிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, விரைந்து கொள்முதல் செய்வது என்பதில் மந்த நிலைமையே நிலவுகிறது.

    விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்லை வெயில் அடிக்கும் சமயத்தில் அறுவடைக்கு முனைப்பு காட்டும் போது, அதே அளவில் ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் செய்வதில் தாமதம் செய்யாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முனைப்பு காட்டி முன்பட்ட குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×