என் மலர்
ஈரோடு
ஈரோடு:
பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு படுக்கை வசதியுடன் கூடிய ஒரு சொகுசு பஸ்புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 29 பேர் பயணம் செய்தனர்.
இந்த பஸ் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி பைபாஸ் ரோடு வழியாக வந்து கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் துடுப்பதியில் இருந்து பெருந்துறைக்கு ஒரு லாரி வந்தது.
இந்த லாரியும், பஸ்சும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக பஸ்சின் டிரைவர் பஸ்சை வேகமாக திருப்பினார். இதனால் லாரியின் மீது லேசாக உரசிய பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீர் என்று ரோட்டில் கவிழ்ந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு பெருந்துறை தீயணைப்பு படையினரும் மற்றும் பெருந்துறை போலீசாரும் விரைந்து சென்றனர். அவர்கள் கவிழ்ந்த பஸ்சில் இருந்து பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்ததனர். இவர்கள் பெருந்துறையில் உள்ள ஒருதனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீசாருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரூபேஸ்குமார் மீனா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணை சூப்பிரண்டு நரசிம்மன், இன்ஸ்பெக்டர்கள் சேகர், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆயுதப்படை போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 300–க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
கோபி:
கோபி அருகே உள்ள பிள்ளையார் கோவில்துறை பகுதியை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லபட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
இவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
அனுமதியின்றி வாகனங்களில் மணல் ஏற்றி வருவதாக ஈரோடு ஆர்.டி.ஓ நர்மதா தேவிக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி நேற்று இரவு அவர் ஈரோடு சம்பத் நகரில் சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக ஒரு டிராக்டரில் மணல் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது
இதுபோல ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் நடந்த சோதனையில் 2 லாரிகளில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் 2 லாரி களிலும் மற்றும் டிராக்டரில் அனுமதியின்றியும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதை யொட்டி அநத 3 வாகனங்களையும் ஈரோடு ஆர்.டி.ஓ நர்மதா தேவி பறிமுதல் செய்தார்.
இந்த லாரிகள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு:
வழக்கறிஞர் சட்டத்தில் உள்ள புதிய சட்ட விதிகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வக்கீல்கள் கடந்த மாதம் 6–ந்தேதி முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சட்ட நேற்று நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை,கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி ஆகிய 5 இடங்களில் நகல் எரிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.
பவானியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் குணசேகரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் அருள் தாஸ் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்பிறகு சட்டநகலை வக்கீல்கள் எரித்தனர்.
கொடுமுடியில் உள்ள கோர்ட்டு முன்பு பார் கவுன்சில் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மூத்த வக்கீல் குழந்தை வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய சட்டவிதிகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஈரோடு:
கொடுமுடி அய்யம்பாளையம், வடிவுள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது63).
சுப்பிரமணியம் தற்போது கண் ஆபரேசன் செய்துள்ளளதால் அரச்சலூர், கண்ணம்மாபுரம் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணியம் டீ குடிப்பதற்காக கண்ணம்மாபுரத்தில் உள்ள காங்கேயம் –ஈரோடு செல்லும் ரோட்டை கடந்து சென்ற போது எதிரே வந்த கார் சுப்பிரமணியம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழைய பாளையம், சுத்தானந்தன் நகர், ஜீவா நகர், முத்தம்பாளையம் வீட்டு வசதி குடியிருப்பு, வீரப்பம் பாளையம், நஞ்சனா புரம் , தெற்கு பள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம் பாளையம், வள்ளி புரத்தான் பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம்
மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி, கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டு பாளையம், இளைய கவுண்டம் பாளையம், கதிரம்பட்டி, வண்ணான் காட்டு வலசு, நசியனூர், தொட்டி பாளையம், ராய பாளையம், சிந்தன் குட்டை , ஆட்டையாம்பாளையம் மேற்கு புதூர் ஆகிய இடங்களில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இத்தகவலை ஈரோடு நகரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள தொட்டிபாளையம் ரெயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை பற்றி அடையாளம் தெரியாமல் இருந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருந்தனர். இறந்த வாலிபரின் இடது மார்பில் ஷீலா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.
மேலும் வலது கை முன் பகுதியில் ஜி என்ற எழுத்து பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதை அடையாளமாக வைத்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இறந்த வாலிபர் கரூரை சேர்ந்த கவுதம் (வயது 29) என்றும், அவருக்கு திருமணமாகி ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர் என்பதும் கவுதம் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளதும் தெரிய வந்தது.
சம்பவத்தன்று கவுதம் திருப்பூருக்கு வேலை விஷயமாக சென்று உள்ளார். பின்னர் கரூர் வருவதற்காக ரெயிலில் வந்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்த தால் அவர் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டு வந்துள்ளார்.
ரெயில் ஈரோட்டை தாண்டி தொட்டிபாளையம் வந்த போது எதிர்பாராத வகையில் கவுதம் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளது தெரியவந்தது.






