என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதி மூலக்கடம்பூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 25). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து இருந்தார். காட்டுப்பன்றி மற்றும் யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்து இருந்தார்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானை தோட்டத்துக்குள் நுழைய முயன்றது. அப்போது அந்த யானை மின்வேலியில் சிக்கியது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே இறந்தது.
நேற்று காலை தோட்டத்து வழியாக சென்றவர்கள் யானை இறந்து கிடப்பதை பார்த்து டி.என்.பாளையம் வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த யானையை பார்வையிட்டனர். கால்நடை டாக்டர் அசோகன் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
இதுபற்றி கால்நடை டாக்டர் கூறுகையில், “இறந்தது ஆண் யானை. சுமார் 30 வயது இருக்கும். யானை தீவனத்தை தேடி தோட்டத்துக்குள் புகுந்தபோது மின்வேலியில் சிக்கி இறந்துள்ளது” என்றார்.
இறந்த யானையின் தந்தங்களை வெட்டிஎடுத்தபின் யானை அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்டத்து விவசாயி தங்கவேலை கைது செய்தனர். கைதான அவரை கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து தங்கவேல் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பவானி:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு சில பகுதியில் மிதமான மழை பெய்தது. அரச்சலூர், பவானி, பவானிசாகர், கொடிவேரி அணை பகுதியில் நேற்று மாலை மற்றும் இரவில் விட்டுவிட்டு மழை பெய்தது. அதிகமாக பெய்யா விட்டாலும் லேசாக பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.
இதேபோல் ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளான ஆசனூர், விளாங்கோம்பை, தாளவாடி, தல மலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
ஈரோட்டில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. 4 மி.மீட்டர் மழை மட்டும் ஈரோட்டில் பதிவானது. அதிகபட்சமாக அரச்சலூரில் 14 , பவானியில் 11.4, கொடிவேரி அணை பகுதியில் 9 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
பவானிசாகரில் 5.2, சென்னிமலையில் 4 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.
ஈரோடு உள்பட மாவட்டம் முழுவதும் இன்றும் காலையில் இருந்தே வானம் மூடியபடி மேககூட்டமாக இருந்தது. ஒரு சில இடத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம், கடம்பூர் வனப்பகுதி கல் கடம்பூரை சேர்ந்தவர் தங்க வேல் (வயது 48). இவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க மின் வேலி அமைத்திருந்தார்.
வனப்பகுதியில் இருந்து வந்த 10வயது ஆண் யானை ஒன்று இந்த மின்வேலியில் சிக்கியது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். கால்நடை டாக்டர்களும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
பெருந்துறை:
வெள்ளி திருப்பூர் அருகே உள்ள மலையப்பாறை காடு என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி.தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி (வயது 33). இவர்களுக்கு ரவிந்திரகுமார் (11) என்ற மகனும், மகா ஸ்ரீ (9) என்ற மகளும் உள்ளனர்.
இவர்களது உறவினர் ஒருவர் பெருந்துறை தென்றல் நகரில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக கணவன்-மனைவி இருவரும் பஸ்சில் வந்தனர்.
பெருந்துறை போலீஸ் நிலையம் அருகே பஸ்சில் வந்து இறங்கிய அவர்கள் தென்றல் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றனர்.
அரசு ஆஸ்பத்திரி அருகே அவர்கள் சென்ற போது அந்த வழியாக சென்ற ஒரு மொபட் அன்னக்கொடி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
தனது கண் எதிரே தனது மனைவி விபத்தில் அடிபட்டதை பார்த்த பழனிச்சாமி அதிர்ச்சியடைந்து கதறி துடித்தார்.
பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பழனிச்சாமி தனது மனைவி அன்னக்கொடியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அன்னக்கொடி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோபி அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம் பாளையத்தை சேர்ந்தவர் கோமதி (வயது 21). பி.எஸ்.சி. படித்து வந்தார்.
கோமதியும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வளையாம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (26) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 4 மாதத்துக்கு முன் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகும் கோமதி பி.எஸ்.சி 3-ம் ஆண்டு தொடர்ந்து படித்து வந்தார்.
இதற்கிடையே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்தனர்.
அதன்படி காதல் தம்பதியினர் கடந்த 20 நாட்களுக்கு முன் தங்களது பெற்றோர் மற்றும் உறுவினர்களுடன் திருப்பூர் அவினாசி மகளிர் காவல் நிலையம் சென்று நாங்கள் இருவரும் சட்டப்படி பிரிய உள்ளோம். விவாகரத்து செய்ய உள்ளோம் என்று கூறினர்.
ஆனால் மகளிர் போலீசார் அவர்களிடம் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். எனினும் கோமதி கணவருடன் போகாமல் தனது தாய் ஊரான செட்டியாம்பாளையம் சென்றார்.
நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது கோமதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை தூக்கி கொண்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோபி சப்-கலெக்டர் கிருஷ்ணன் உன்னியும் விசாரணை நடத்தி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஈரத்துணியுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களுடைய பசு மாட்டுச்சாணியை கொண்டு வந்து கோவிலில் வழங்கினர். அவ்வாறு கொடுக்கப்பட்டு மாட்டுச்சாணி சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் மதியம் 12 மணிக்கு கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் தாளவாடி சாலையில் உள்ள காரேசுவரர் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலின் அருகில் வைக்கப்பட்டிருந்த மாட்டு சாணியை எடுத்து சிறுவர்கள் மட்டும் ஒருவர் மீது ஒருவர் வீசி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 4 மணிக்கு காரேசுவரர் கோவிலில் இருந்து சாமி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாறுவேடம் அணிந்த பக்தர் ஒருவர் கழுதை மேல் ஏற்றப்பட்டார். பின்னர் அங்கிருந்து பக்தர்கள் ஊர்வலமாக பீரேசுவரர் கோவிலுக்கு ஆடிப்பாடி, மகிழ்ந்தபடி வந்தனர்.
ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சாணியை எடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நேர்த்திக்கடன் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர் ஆண் பக்தர்கள் சாணி உடம்புடன் கோவிலின் உள்ளே சென்று சாமியை வழிபட்டனர். அப்போது சாமிக்கு சிறப்பு தீபாராதனையுடன் பூஜை நடந்தது.
இதுகுறித்து நேர்த்திக்கடன் செலுத்திய கர்நாடக பக்தர் ஒருவர் கூறுகையில், ‘பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்து சென்று மாட்டுச்சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்து விட்டார். இந்த நிலையில் கும்டாபுரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மாட்டுச்சாணங்களை அள்ள தன்னுடைய மாட்டு வண்டியில் அந்த குப்பை மேட்டுக்கு வந்து உள்ளார்.
அப்போது வண்டியின் சக்கரம் குப்பை மேட்டின் ஒரு பகுதியில் ஏறி இறங்கியது. இதில் அங்குள்ள மாட்டு சாணியில் இருந்து திடீரென்று ரத்தம் பீறிட்டு வந்ததை கண்டதும் அந்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார். உடனே ரத்தம் வழிந்த மாட்டு சாணியை அப்புறப்படுத்தி விலக்கி பார்த்தார். அப்போது அங்கு ஒரு சிவலிங்கம் இருந்ததை கண்டார்.
இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியில் பக்தர்கள் கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு சாமி வந்து அருள்வாக்கு கூறுகையில், ‘இந்த பகுதியில் ‘பீரேசுவரர்’ என்ற பெயரில் எனக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும். மேலும் சாணியில் இருந்து நான் வெளிப்பட்டதால் என் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாணியை ஒருவர் மீது ஒருவர் வீசி வழிபட்டால் அவர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவேன்,’ என்று தெரிவித்தான். அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த திருவிழா நடந்து வருகிறது. அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்,’ என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் தாளவாடி, சிக்கள்ளி, மல்லன்குழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூர், கொள்ளேகால் உள்பட பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.
ஈரோடு:
கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவில் முன்பு உள்ள அறுபத்து மூவர் மடம் அருகே ஒரு முதியவர் நடந்து சென்றார்.
அப்போது அவர் திடீர் என்று சுருண்டு விழுந்தார். மல்லாந்த நிலையில் கிடந்த அவர் சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதன்பிறகு பிரேத பரிசோதனைக்கு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு முதியவரின் உடலை அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்தவரின் பெயர் ஏகாம்பரம் (வயது 82) ஓசூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
உடல்நலம் இல்லாமல் இருந்த இவர் சாமி கும்பிட வந்த போது இறந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி தண்ணீர் பந்தல் என்ற இடத்தை சேர்ந்தவர் மசப்பன். இவரது மகன் ராம் குமார் (வயது 23).
ராம் குமார் தீபாவளியை கொண்டாட தனது நண்பர்களுடன் ஈரோட்டை அடுத்த காரணாம் பாளையம் அணைப்பகுதிக்கு வந்தார்.
அணையை சுற்றி பார்த்த அவர்கள் பிறகு அணையில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அணையின் ஆழமான பகுதியில் குளித்து கொண்டு இருந்த போது ராம் குமார் தண்ணீரில் மூழ்கினார்.
இதை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ராம்குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய ராம் குமார் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பலமாக பெய்யாவிட்டாலும் பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.
அதேபோல் நேற்று 2-வது நாளாகவும் கனமழை பெய்யாவிட்டாலும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
சென்னிமலை, ஒரத்துப்பாளையம், பவானி, சத்தியமங்கலம் மற்றும் ஆப்பக்ககூடல் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.
இதில் ஆப்பக்கூடல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வெள்ளாள பாளையம், கூத்தம்பூண்டி, மூங்கில்பட்டி, கீழ்வாணி, அத்தாணி ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு 11.45மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் இடி-மின்னலுடன் கொட்டியது.
இதனால் அப்பகுதி ரோட்டில் மழை தண்ணீர் பாய்ந்து ஓடியது. குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இன்றும் ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வானம் மூடியபடி இருட்டாகவே காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் மழை பெய்யாவிட்டாலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது பலத்த மழை பெய்யும்., குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தலைவர் பி.கே.தெய்வசிகாமணி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பாசனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை பயிரிட முடியவில்லை. இந்த ஆண்டு குறுவை, சம்பா ஆகிய 2 பாசனங்களும் சாகுபடி செய்ய முடியவில்லை. தமிழகத்திற்கான காவிரி உரிமையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த பிறகும் மத்திய அரசு கர்நாடக மாநில அரசுடன் சேர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கடந்த 6-ந் தேதி சென்னையில் அனைத்துகட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த 17, 18-ந் தேதிகளில் பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் காவிரி உரிமை மீட்பு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதில் 10 லட்சம் பேர் ஊர்வலமாக சென்று சென்னை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பிறகு போராட்ட தேதி அறிவிக்கப்படும்.
போராட்டம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பினர் ஆதரவையும் திரட்ட உள்ளோம். முதல்கட்டமாக 2-ந் தேதி (நாளை) முதல் 3 நாட்கள் சென்னையில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிற அமைப்பினர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.
தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி காலத்தில் வங்கிகள் பயிர்க்கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்கவும், குறுகிய கால கடன்களை நீண்ட கால கடனாக மாற்றி அமைக்கவும், புதிய கடன்களை வழங்கவும் வங்கி மேலாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரம் அளித்து உள்ளது. எனவே கடன் வசூலை நிறுத்தி வைத்து, குறுகிய கால கடனை நீண்ட கால கடனாக மாற்றி அறிவிக்க வேண்டும்.
வருங்காலத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்க ஏரி, குளங்களை துர்வாரி மழை தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வறட்சியால் மிகவும் சிரமப்பட்டு வருவதால் கரும்பு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.காசியண்ணன், செயற்குழு உறுப்பினர் பூபதிசுந்தரம், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில செயலாளர் கே.ஏ.சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்திலும் நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் மழை பெய்ய தொடங்கி இருப்பதையொட்டி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோபி, கொடிவேரி அணைப்பகுதி மற்றும் சத்தியமங்கலம், தாளவாடி, சென்னிமலை, பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.
மேகக்கூட்டம் திரண்டிருந்ததை பார்த்தால் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிதமான மழையுடன் நின்றுவிட்டது.
ஈரோட்டிலும் கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்திருந்தாலும் மழை பெய்யவில்லை. ஈரோடு மாவட்டத்தில் இன்றும் வானம் மூடியபடி இருந்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியத்தின் மனைவி சகுந்தலா கடந்த 28-ந் தேதி இரவு மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று ஈரோட்டிற்கு வந்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேரளா மாநிலத்தில் இருந்து 24 லாரிகளில் மருத்துவக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு கோவை மாவட்டம் மதுக்கரை, கே.கே.சாவடி ஆகிய இடங்களில் கொட்டப்பட்டது. இந்த சம்பவம் மிகுந்த கண்டனத்திற்கு உரியது. மருத்துக்கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தமிழகத்தில் அமைக்க பல ஆய்வுகள் நடத்தப்பட்டது. தமிழக அரசு இடத்தை உறுதி செய்தால் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே உடனடியாக இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து உள்ளோம். சட்டமன்ற இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்கிற நிலை உருவாகிவிட்டது. எனவே தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது. மனசாட்சிக்கு ஏற்ப வாக்களிக்கலாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
தமிழ்நாட்டில் புதிய கவர்னர் அறிவிக்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் முழுநேர கவர்னரை மத்திய அரசு விரைவில் நியமனம் செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. தமிழக விவசாயிகளை குஜராத் மாநில விவசாயிகளைபோல் நினைத்து மத்திய அரசு செயல்பட வேண்டும். இதேபோல் கர்நாடகா அரசும் விவசாயிகளை ஒன்றாக நினைத்து தண்ணீர் வழங்க வேண்டும். இதைத்தான் அரசியல் தலைவர்களும் பார்க்க வேண்டும். எனவே மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் நியாயத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். அதேபோல்தான் அரசும் செயல்பட வேண்டும். எனவே பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மையினரை அச்சப்படுத்த தேவையில்லை.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.






