என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பீரேசுவரர் கோவிலில் சாணியடி திருவிழா நடந்தபோது எடுத்த படம்.
    X
    பீரேசுவரர் கோவிலில் சாணியடி திருவிழா நடந்தபோது எடுத்த படம்.

    பீரேசுவரர் கோவிலில் திருவிழா: பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணி வீசி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்

    தாளவாடி அருகே உள்ள பீரேசுவரர் கோவிலில் நடந்த சாணியடி திரு விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணி வீசி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரத்தில் 300 ஆண்டு பழமையான பீரேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த 3-வது நாளில் சாணியடி (பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணியை அள்ளி வீசும் நிகழ்ச்சி) என்ற வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஈரத்துணியுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களுடைய பசு மாட்டுச்சாணியை கொண்டு வந்து கோவிலில் வழங்கினர். அவ்வாறு கொடுக்கப்பட்டு மாட்டுச்சாணி சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    பின்னர் மதியம் 12 மணிக்கு கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் தாளவாடி சாலையில் உள்ள காரேசுவரர் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலின் அருகில் வைக்கப்பட்டிருந்த மாட்டு சாணியை எடுத்து சிறுவர்கள் மட்டும் ஒருவர் மீது ஒருவர் வீசி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 4 மணிக்கு காரேசுவரர் கோவிலில் இருந்து சாமி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாறுவேடம் அணிந்த பக்தர் ஒருவர் கழுதை மேல் ஏற்றப்பட்டார். பின்னர் அங்கிருந்து பக்தர்கள் ஊர்வலமாக பீரேசுவரர் கோவிலுக்கு ஆடிப்பாடி, மகிழ்ந்தபடி வந்தனர்.

    ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சாணியை எடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நேர்த்திக்கடன் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர் ஆண் பக்தர்கள் சாணி உடம்புடன் கோவிலின் உள்ளே சென்று சாமியை வழிபட்டனர். அப்போது சாமிக்கு சிறப்பு தீபாராதனையுடன் பூஜை நடந்தது.

    இதுகுறித்து நேர்த்திக்கடன் செலுத்திய கர்நாடக பக்தர் ஒருவர் கூறுகையில், ‘பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்து சென்று மாட்டுச்சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்து விட்டார். இந்த நிலையில் கும்டாபுரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மாட்டுச்சாணங்களை அள்ள தன்னுடைய மாட்டு வண்டியில் அந்த குப்பை மேட்டுக்கு வந்து உள்ளார்.

    அப்போது வண்டியின் சக்கரம் குப்பை மேட்டின் ஒரு பகுதியில் ஏறி இறங்கியது. இதில் அங்குள்ள மாட்டு சாணியில் இருந்து திடீரென்று ரத்தம் பீறிட்டு வந்ததை கண்டதும் அந்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார். உடனே ரத்தம் வழிந்த மாட்டு சாணியை அப்புறப்படுத்தி விலக்கி பார்த்தார். அப்போது அங்கு ஒரு சிவலிங்கம் இருந்ததை கண்டார்.

    இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியில் பக்தர்கள் கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு சாமி வந்து அருள்வாக்கு கூறுகையில், ‘இந்த பகுதியில் ‘பீரேசுவரர்’ என்ற பெயரில் எனக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும். மேலும் சாணியில் இருந்து நான் வெளிப்பட்டதால் என் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாணியை ஒருவர் மீது ஒருவர் வீசி வழிபட்டால் அவர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவேன்,’ என்று தெரிவித்தான். அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த திருவிழா நடந்து வருகிறது. அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்,’ என்று தெரிவித்தார்.

    இந்த விழாவில் தாளவாடி, சிக்கள்ளி, மல்லன்குழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூர், கொள்ளேகால் உள்பட பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.
    Next Story
    ×