என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம் பெண் குழந்தையுடன் பெருந்துறை போலீசில் ஒப்படைப்பு
- தனிப்படை போலீசார் சுமித்ராவை குழந்தையுடன் அழைத்து வந்தனர்.
- இன்று சுமித்ரா தனது குழந்தையுடன் பெருந்துறையில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாலக்கரை கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் சுமித்ரா(22). இவர், கடந்த 2017-ம் ஆண்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் பணியாற்றிய மேற்கு வங்க மாநிலம் கலான்பூர் அம்தோப் பகுதியை சேர்ந்த சுப்ரத தாஸ் என்பவர் சுமித்ராவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கொல்கத்தாவுக்கு கடத்தி சென்று விட்டார்.
கடந்த 6 மாதத்துக்கு முன் சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சுமித்ராவை கடந்த 3 மாதமாக அவரது கணவர் சுப்ரததாஸ் மது போதையில் அடித்து துன்புறுத்துவதாகவும், சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், வாட்ஸ்-அப் வீடியோ காலில் தனது பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார்.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சித்ரவதைக்கு ஆளாகியுள்ள மகளை மீட்டு தரக்கோரி பெற்றோர் ஈரோடு எஸ்.பி. சசிமோகனிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த புகாரை விசாரித்து, சுமித்ராவை மீட்டு வர பெருந்துறை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தனிப்படை போலீசார் கடந்த 17-ந் தேதி மேற்கு வங்க மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு உள்ளூர் போலீசின் உதவியுடன் சுமித்ராவை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமித்ரா இருக்கும் இடத்தை கண்டறிந்ததும், அவரை மீட்டு மங்கள்கோட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அம்மாநில போலீசார் சுமித்ராவுடன் விசாரணை நடத்தியதில், சுப்ரததாஸ் கொடுமைப்படுத்தியது உண்மை என்பது தெரியவந்தது. எனினும் கணவர் மீது சுமித்ரா புகார் ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில் மீட்கப்பட்ட சுமித்ராவை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தனிப்படை போலீசார் சுமித்ராவை குழந்தையுடன் அழைத்து வந்தனர்.
இன்று சுமித்ரா தனது குழந்தையுடன் பெருந்துறையில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். போலீசாரிடம் கொல்கத்தாவில் தனக்கு நடந்த கொடுமை பற்றி கண்ணீர் மல்க கூறினார்.
இதனை எடுத்து சுமத்திராவை அவரது பெற்றோருடன் அழைத்து செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.






