என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடோனில் பதுக்கி கடைகளுக்கு குட்கா சப்ளை செய்த வியாபாரிகள்
- குடோனுக்குள் சென்று சோதனை செய்தபோது மூட்டைகளுக்கு இடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
- போலீஸ் விசாரணையில் குட்கா கடத்தல் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே பட்டேல் தெருவில் உள்ள ஒரு குடோனில் மளிகை பொருட்கள் மூட்டைக்குள் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோவை மண்டல குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்து பெருந்துறை உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருடைய உத்தரவின் பேரில் சிவகிரி போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்கு நேரடியாக சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது குடோன் முன்பு சரக்கு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த வேனில் இருந்து 3 பேர் மூட்டைகளை குடோனுக்குள் இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
உடனடியாக மறைந்திருந்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் குடோனுக்குள் சென்று சோதனை செய்தபோது வெங்காயம் மற்றும் அரிசி, உப்பு மூட்டைகளுக்கு இடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா, குட்கா மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.
விமல் பாக்கு 51 கிலோ, கூலிப் 121 கிலோ, ஹான்ஸ் 415 கிலோ, கணேஷ் பாக்கு 50 கிலோ என மொத்தம் 640 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.
இதனையடுத்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த வேல்முருகன் (48), அவருடைய தம்பி சந்திரசேகர் (45), மற்றும் வேன் டிரைவர் தங்கராஜ் (55) ஆகியோர் என தெரிய வந்தது.
இதில் இளங்கோ மற்றும் சந்திரசேகர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சிவகிரி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் குட்கா கடத்தல் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
இளங்கோவும், சந்திரசேகரும் அதேப் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதால் மளிகை பொருட்களை வைப்பதற்காக பட்டேல் தெருவில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து உள்ளனர். அங்கு மளிகை பொருட்களை மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருந்தனர்.
கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனம் மூலம் குட்காவை வாங்கி வந்து குடோனில் வைத்துள்ளனர். சரக்கு வேன் டிரைவராக தங்கராஜ் இருந்துள்ளார்.
கர்நாடகாவில் இருந்து மளிகை பொருட்களை வாங்கும் போது அப்படியே குட்காவையும் மூட்டை, மூட்டையாக வாங்கி வந்து அதனை வெங்காயம், அரிசி மூட்டைக்கு இடையில் பதுக்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்துள்ளனர்.
வழியில் இருக்கும் சோதனை சாவடிகளில் போலீசார் மேலோட்டமாக பார்க்கும் போது அரிசி, வெங்காயம் மூட்டை போன்று இருப்பதால் போலீசாரும் இதை கவனிக்கவில்லை.
இதை சாதமாக்கி கொண்ட இளங்கோ, சந்திரசேகர் தொடர்ந்து இதேபோன்று குட்காவை கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து சிவகிரியில் உள்ள குடோனில் பதுக்கி வைத்துள்ளனர்.
பின்னர் பதுக்கி வைத்துள்ள குட்காவை சிவகிரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி உள்ளனர்.
இந்த தகவலை அடுத்து சிவகிரி போலீசார் சிவகிரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பழைய பஸ் நிலையத்தில் அந்தோணி டென்னிஸ் (28), சிவகிரி கந்தசாமி பாளையத்தில் பாலசுப்பிரமணியன் (52), சிவகிரி அருகே வாழை தோட்டத்தில் மரியமுத்துசெல்வன் (36), கார வலசுவில் ஜெயமுருகன் (43), சிவகிரி அருகே ஆஞ்சூரில் அன்ன பாண்டியன் (47), ஜெயபாலன்(40) ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த குட்கா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிவகிரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






