search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது
    X

    குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது

    • குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வந்தது.
    • இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடி வாரத்தில் 42 அடி உயரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்தடைகிறது.

    இந்த அணையில் உள்ள இரு பாசன வாய்க்கால்கள் மூலமாக குண்டேரி ப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வந்தது. மேலும் குண்டேரிப்பள்ளம் பகுதியில் மழையின் அளவு 75.20 மி.மீ மழை பெய்து உள்ளது.

    நேற்று காலை அணையின் நீர்மட்டம் 39 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 30 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில் மாலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இரவு அணைக்கு நீர் வரத்து படிப்படியாக 2ஆயிரத்து 600 கன அடியாக அதிகரி த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி குண்டேரி ப்பள்ளம் அணைக்கு நீர்வரத்தானது 1,759 கனஅடியாக இருந்தது. உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால் ஆற்றின் வழியோரங்களில் உள்ள குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம், வினோபாநகர், வாணிப்புத்தூர், இந்திரா நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    அதே நேரத்தில் குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றி உள்ள கிராம மக்கள் ஆபத்தை உணராமல் அணையில் இருந்து வெளியேறும் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்து வருகின்றனர். பொதுப்ப ணித்துறை ஊழியர்கள் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டு கொள்ளாமல் மீன் பிடித்து வருகின்றனர்.

    அணையில் இருந்து பெரிய அளவிலான காய்ந்த மரங்கள் காட்டாற்றில் அடித்து வரப்படும் நிலையில் மீன் பிடிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அணை நிரம்பி வெள்ள நீர் வெளியேறும் காலங்களில் மீன் பிடிப்பதை பொதுப்பணித்துறையினர் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் டி.என்.பாளையம் அருகே உள்ள பெருமுகை ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவில் 15 அடி உயரத்தில் அமைந்துள்ளது சஞ்சீவராயன் குளம். நீர்பிடிப்பு பகுதிகளான கரும்பாறை, தொட்டகோம்பை உள்ளிட்ட வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இதனால் 10 அடியாக இருந்த சஞ்சீவராயன் குளத்தின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று அதிகாலை குளத்திற்கு வரும் 500 கன அடி உபரி நீர் முழுமையாக வெளியேறியது. தற்போது உபரிநீர் படிப்படியாக குறைந்து வருகிறது.

    இன்றும் மழை பெய்தால் நீர்வரத்து அதிகமாகும் என்பதால் இந்த குளத்தை சுற்றியுள்ள கிராமங்களான கள்ளிப்பட்டி, கணக்க ம்பாளையம், பகவதிநகர், வளையபாளையம், சைபன் புதூர், எரங்காட்டூர், சின்ன காளியூர், காளியூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 101.54 அடியாக உள்ளது.நேற்று அணைக்கு வினாடிக்கு 2,115 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்து 5844 கனஅடியாக நீர் வரத்து வருகிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1500 கன அடி என மொத்தம் 1,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் 33.50 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. இந்த அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    மற்றொரு பிரதான அணையான பெரும்பள்ளம் அணை 22.97 அடியில் உள்ளது.தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×