என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு டவுன் பஸ்-தனியார் பனியன் கம்பெனி பஸ் நேருக்குநேர் மோதி விபத்தானது.
அரசு பஸ்-தனியார் கம்பெனி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து; 12 பேர் காயம்
- அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பனியன் கம்பெனி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்தானது.
- இந்த விபத்தில் தனியார் பனியன் கம்பெனி பஸ்சில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில் ஒரு டவுன் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ் காவிலி பாளையம், உக்கரம், பெரியூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்றது.
இதே போல் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனி பஸ் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்றது.
அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பனியன் கம்பெனி பஸ் ஆகியவை பெரியூர் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதே போல் தனியார் பனியன் கம்பெனி பஸ்சின் முன்பகுதியில் சேதமானது.
இந்த விபத்தில் தனியார் பனியன் கம்பெனி பஸ்சில் இருந்த வளர்மதி (42), தேவி (49), தனலட்சுமி (43), சரசாள் (35), நாகராஜ் (43), ரங்கம்மாள் (70), கந்தசாமி (48), ஆம்ஸ்ட்ராங் (50) உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






