search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
    X

    கோவைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

    • அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கோவை என்பது கலைஞரின் கோட்டையாக இருந்து, தற்போது மு.க.ஸ்டாலின் எக்கு கோட்டையாக இருக்கிறது என்பதை காட்டிட வேண்டும்.

    கோவை :

    ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை காளப்பட்டி சுகுணா ஆடிட்டோரியத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கோவை, பொள்ளாச்சியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

    முதல்-அமைச்சருக்கு விமான நிலையம் தொடங்கி பயணியர் இல்லம் வரை மிக எழுச்சியோடு ஒரு வரவேற்பை வழங்க வேண்டும். அன்று இரவு அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மறுநாள் 15-ந் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறும் வேளாண்மைத்துறையின் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கிணத்துக்கடவு செல்லும் அவர் அங்கு பயணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    அதன்பின் பொள்ளாச்சி செல்லும் அவர் அங்கு மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் மாபெரும் பொதுக்கூட்ட விழாவிலும் பங்கேற்கிறார்.

    எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிற இடங்களில் எல்லாம் தி.மு.கவினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.கவினர் முழு ஒத்துழைப்புடன் செய்ய வேண்டும்.

    இந்த செயற்குழு கூட்டத்தின் வாயிலாக நமது அடுத்த இலக்கு என்பது, பாராளுமன்ற தேர்தலாக இருந்திட வேண்டும். தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் செயல்படுத்த கூடிய திட்டங்கள் இந்தியா முழுவதும் செயல்படுத்த கூடிய வகையில், தீர்மானிக்க கூடிய சக்தியாக மாற தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வென்டுறெடுப்போம். அதிலும் கோவை, பொள்ளாச்சியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக வாக்குகளில் வென்ற தொகுதி என்பதை நாம் காட்டிட வேண்டும்.

    கோவையிலும், பொள்ளாச்சியிலும் சில பேர் இன்று கூட்டங்களை நடத்தி விட்டு ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். கோவை என்பது கலைஞரின் கோட்டையாக இருந்து, தற்போது மு.க.ஸ்டாலின் எக்கு கோட்டையாக இருக்கிறது என்பதை காட்டிட வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலில் இரவு, பகல் பாராமல் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்து வெற்றி பெற்றோம். அதேபோல வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ஒரு மகத்தான வெற்றிக்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

    கோவையில் நடைபெறும் விழா என்பது பாராளுமன்ற தேர்தலின் பிரசாரமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப தி.மு.க. நிர்வாகிகள் செயல்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில், கோவை மற்றும் பொள்ளாச்சியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொள்ளாச்சி பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு கோவை வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக பொறுப்பு குழு உறுப்பனர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூர் பொருளாளர்கள், செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் என அனை வரும் திரளாக பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிரு ஷ்ணன், சி.ஆர். ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன், ஜெய ராமகிருஷ்ணன், பத்மநாபன், மாநில தகவல்தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் மகேந்திரன், எம்.பி. சண்முகசுந்தரம், துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.பி. நாகராஜ் மற்றும் மாநில அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×