என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் மின்பாதுகாப்பு வகுப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- அலுவலர்களுக்கு அறிவுரை
- நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் சிறப்பு ஆய்வு கூட்டம் தியாகராஜ நகரில் இன்று நடைபெற்றது.
- மின்னகம் மின் நுகர்வோர் சேவை மைய தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்மந்தமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் சிறப்பு ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகம் தியாகராஜ நகரில் இன்று காலை நடைபெற்றது. நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
சீரான மின்விநியோகம்
கூட்டத்தில் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அனைத்து மின் நுகர்வோரிடம் அந்தந்த பகுதி பிரிவு அலுவலர் தொலைபேசி எண்ணும், பணியாளர்கள் தொலைபேசி எண்களையும் வழங்குவதற்கும் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர், அனைத்து கோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு நெறி முறைகளுடன் பணிபுரிய பாதுகாப்பு வகுப்புகள் தொடர்ச்சியாக அனைத்து பிரிவு அலுவலகத்திலும் நடத்தி பணியாளர்களிடம் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க ஆலோசனை வழங்கினார்.நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்கவும், வருங்கால மின் நுகர்வோர்களை கருத்தில் கொண்டு புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பணி ஆணைகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
மின்பாதுகாப்பு வகுப்பு
மின் நுகர்வோர்களுக்கு மின் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள் , மற்றும் அந்தந்த பகுதிகளில் மின்பாதுகாப்பு வகுப்பு நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இணையவழி மூலமாக மின் கட்டணம் செலுத்தும் வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து பொது மக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மேலும் மின் நுகர்வோர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும், மின் நுகர்வோர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், பொதுமக்கள் மின்சாரம் சம்மந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மைய தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்மந்தமான தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றார்.
கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம், கோட்ட செயற்பொறியாளர்கள் வளனரசு(வள்ளியூர்), சுடலையாடும்பெருமாள்(கல்லிடைக்குறிச்சி ), கற்பகவிநாய கசுந்தரம்(தென்காசி), ஆதிலட்சுமி(கடையநல்லூர்), பாலசுப்ரமணியன் (சங்கரன்கோவில்) மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவுகள் கையப்படுத்துதல் செயற்பொறியாள திருநாவுக்கரசு, துணை நிதி கட்டுப்பட்டு அலுவலர் வீரலட்சுமணன், உதவி செயற்பொறியாளர்கள் சைலஜா, சலோமிவாசுகி, சசிரேகா, சண்முகராஜ், சுரேஷ்குமார் மற்றும் மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.






