search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்க்கட்டளை ஏரியில் கலக்கும் கழிவுநீர்
    X

    கீழ்க்கட்டளை ஏரியில் கலக்கும் கழிவுநீர்

    • கீழ்கட்டளை ஏரியை சுற்றிலும் பெரிய குடியிருப்புகள் வந்து உள்ளன.
    • ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சி, 2-வது மண்டலத்துக்குட்பட்ட பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கீழ்கட்டளை ஏரிஉள்ளது. இது கிழக்குகடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி பெரும்பாலான ஐ.டி நிறுவன ஊழியர்கள் சென்று வருகின்றனர். புறநகர் பகதிகளிள் அசூர வளர்ச்சியின் காரணமாக இந்த சாலையும் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டு உள்ளது. கீழ்கட்டளை ஏரியை சுற்றிலும் பெரிய குடியிருப்புகள் வந்து உள்ளன. இதானல் ஏரி இடமும் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. மேலும் ஏரிக்கு வரும் கழிவுநீரும் அதிகரித்து உள்ளது. கழிவு நீர் பிரச்சனை குறித்து எந்த ஒரு திட்டமிடலும் இல்லாததால் ஆறுபோல் கழிவு நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இதன் காரணமாக ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக 18, 19,20, ஆகிய வார்டுகளில் நிலத்தடி நீர் பாதிக்கபட்ட தோடு குடிநீரிலும் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதேபோல் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் அங்குள்ள மீன்களும் அதிக அளவில் இறந்து வருகின்றன. கீழ்கட்டளை ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே கீழ்கட்டளை ஏரியில் கழிவு நீர் கலப்பது பற்றி அறிந்ததும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் பா.ஜ.க.வினர் கீழ்கட்டளை ஏரியை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் கூறும்போது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி பெருமாள், ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் சூரியநாராயணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒரு மாதத்திற்குள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகளை பார்வையிட்டு அறிக்கை தயார் செய்ய உள்ளனர். அதனை செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. வெளியிடும். பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகர மேம்பாட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தாம்பரம் மாநகராட்சியை எப்படி மேம்படுத்துவது என்ற பணியை செய்ய வேண்டும். ஏரி மற்றும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, தரமான வசதிகளை பெற்றுத் தருவதற்கு தொடர்ந்து போராடுவோம். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

    Next Story
    ×