search icon
என் மலர்tooltip icon

  உள்ளூர் செய்திகள்

  தி.மு.க. அரசின் 3-வது பட்ஜெட் மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி
  X

  தி.மு.க. அரசின் 3-வது பட்ஜெட் மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி

  • தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்தது.
  • தி.மு.க. அரசின் 3-வது பட்ஜெட் மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட்‌.

  சென்னை:

  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஈரோடு தொகுதியில் வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல அடைத்து வைத்து சித்திரவதை செய்து அச்சுறுத்தினர். இப்படி வாக்காளர்களை வாக்களிக்க செய்தது. மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்து உள்ளது.

  பால் விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய்

  வழக்குகள் போடப்படுகிறது. இதுபோன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தோம்.

  பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை. எதிர்க்கட்சியினரின் குரல் வளையை திமுக அரசு நசுக்குகிறது.

  நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்கு விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு அனுமதி பெறாதது கண்டிக்கத்தக்கது.

  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்காமல் தி.மு.க. அரசு ஏமாற்றி இருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 23 மாதங்களில், 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். ஆனால், அதற்கான நிதியை வழங்கவில்லை.

  பத்திரப்பதிவு , சாலை வரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை மூலமாக அரசுக்கு வரிவருவாய் உயர்த்து இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு அதை செய்யவில்லை.

  அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்களை அறிவித்தோம், அதற்கான நிதியையும் ஒதுக்கினோம். கொரோனா காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் வருவாய் குறைந்தது. கொரோனா தொற்றை குறைப்பதற்காக பல்வேறு வழிகளில் செலவு செய்தோம். ஆனால், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து, வரி வருவாய் அதிகரித்து, செலவு குறைந்தது. ஆனாலும், நிதி பற்றாக்குறை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

  நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.

  தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது. அடிக்கடி பாலியல் வன்கொடுமை நடக்கிறது. ஒரே நாளில் 13 கொலை நடந்து இருக்கிறது.

  பள்ளி, கல்லூரியில் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

  தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது.

  இப்போது, ஆட்சிக்கு வந்தபிறகு அந்தர்பல்டி அடித்து, தகுதியின் அடிப்படையில் தான் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது ஏமாற்றும் வேலை. இந்த திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கி இருப்பதன் மூலம், சுமார் ஒரு கோடி பெண்களுக்கு வழங்க முடியும் என்று நினைக்கிறேன்.

  தி.மு.க. அரசின் 3-வது பட்ஜெட் மக்களை ஏமாற்றுகின்ற பட்ஜெட். மின்மினி பூச்சி, மக்களுக்கு வெளிச்சம் தராது. கானல் நீர், மக்களின் தாகத்தை தீர்க்காது. அதேபோல் தான் தி.மு.க. அரசின் பட்ஜெட் வெற்று அறிவிப்பாக உள்ளது. இதன்மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×