search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுவடை செய்த ஈர குறுவை நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
    X

    நெல்மணிகள் காய வைக்கும் பணியில் விவசாயிகள்.

    அறுவடை செய்த ஈர குறுவை நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

    • முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இரண்டு நாட்களாக மழை இன்று வெயில் அடிப்பதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட ஈரமான நெல்மணிகள் சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்த ஆண்டு டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-க்கு முன்பாக மே மாதம் 24 ஆம் தேதியே திறக்கப்பட்டது.

    வழக்கமாக குறுவை சாகுபடி டெல்டா மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் செய்யப்படுவது வழக்கம் இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் குருவை சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டது. தற்போது வரை 1 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்துள்ளது.

    மீதி அறுவடை பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கடந்த நான்கு நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.

    தற்போது இரண்டு நாட்களாக மழை இன்று வெயில் அடிப்பதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட ஈரமான நெல்மணிகள் சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்ற நிலை இருப்பதால் தார்ப்பாயுடன் உள்ளனர். கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். தேவையான அளவு உலர் கலம் எந்திரம் இல்லாத காரணத்தால் ஈரப்பதமான நெல்லை காய வைத்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் ஈரப்பத அளவை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி 3 லட்சத்து 33 ஆயிரத்து 450 ஏக்கர் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை சம்பா சாகுபடி 81 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×