என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிகம் சுகாதார நிலையத்தில்கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க   கோரிக்கை
    X

    உரிகம் சுகாதார நிலையத்தில்கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரிக்கை

    • தினசரி 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
    • உள்நோயாளிகளுக்கு 5 படுக்கை வசதி மட்டுமே உள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பகுதிகள் மலைகள் மற்றும் வனப்பகுதிகளால் சூழ்ந்துள்ளன.

    இப்பகுதி மக்களுக்கு தாங்கள் வசிக்கும் இடத்தில் மருத்துவ வசதி கிடைக்காததால், நீண்ட தூரம் பயணம் செய்யும் அவலம் இருந்து வருகிறது.

    அஞ்செட்டியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள உரிகம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இக்கிராமத்தை சுற்றிலும் கோட்டையூர், வீரனப்பள்ளி, ஜீவநத்தம், பிலிக்கல், நூருந்துசாமி மலை, உடுபராணி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் அவசர சிகிச்சைக்கு உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், 50 கிமீ தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டைக்குச் செல்லும் நிலையுள்ளது.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் உரிகம் கிராமத்தைச் சுற்றிலும் 35 மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பயன்பெறும் உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டும் உள்ளார். போதிய செவிலியர்களும் இல்லை. உள்நோயாளிகளுக்கு 5 படுக்கை வசதி மட்டுமே உள்ளது.

    மேலும், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க 3 இன்குபேட்டர்கள் உள்ளன. இதில் 2 பழுதாகி உள்ளன. மேலும், இதற்காக யுபிஎஸ் வசதியுள்ளது. ஆனால், அது சிறிது நேரம் மட்டும் இயங்கும் நிலையில் உள்ளது. மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர் வசதியில்லை.

    மலைக் கிராம மக்களின் நலன் கருதி சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விஷக்கடி சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும் என கூறினர்.

    இது தொடர்பாக சுகாதார நிலைய ஊழியர்கள் கூறுகையில் இங்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களை மகப்பேறுக்கு தேன்கனிக்கோட்டை, ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்புகிறோம். இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மீண்டும் மின்சாரம் வர 2 நாள் வரை ஆகிறது.

    சுற்றுச்சுவர் இல்லாததால், அடிக்கடி இரவு நேரங்களில் வனவிலங்குகள் சுகாதார நிலைய வளாகத்தில் சுற்றுவதால், இரவு பணியில் அச்சத்துடன் இருக்கும் நிலையுள்ளது.

    போதிய மருத்துவர், செவிலியர் இல்லாததால் சிகிச்சைக்கு வருவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால், தேன்கனிக்கோட்டை, ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம் என கூறினர்.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×