என் மலர்tooltip icon

    கடலூர்

    தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பண்ருட்டி பா.ம.க. வேட்பாளர் தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி தொகுதி பா.ம.க. வேட்பாளராக தர்மலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பா.ம.க. முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பண்ருட்டியில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் உள்ள இந்திராநகர் பகுதியில் பிரசார மேடை அமைக்கப்பட்டது. ஆனால் அன்புமணி ராமதாஸ் இரவு 10.20 மணி அளவில் பண்ருட்டி வந்தார். 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்பதால் அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். அதன் பின்னர் பா.ம.க. வேட்பாளர் தர்மலிங்கம், நகர செயலாளர் நந்த கோபால் மற்றும் நிர்வாகிகள் அந்த பகுதியில் வாக்கு சேகரித்தனர்.

    இது குறித்து பண்ருட்டி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேட்பாளர் தர்மலிங்கம், நகரசெயலாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மீது இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்தார்.

    தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படுவதால் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று காட்டுமன்னார் கோவில் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

    தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு இருப்பது வரவேற்கதக்கதாகும்.

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 22 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரை நம்பியுள்ளது, மேலும் சென்னை உள்பட 7 மாநகராட்சிகள், 25 மாவட்டங்களில் வாழக்கூடிய மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

    ஆனால் கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விடக்கூடாது என்று கூறி ஏற்கனவே 6 தடுப்பணைகளை அங்கு கட்டிவிட்டது.

    தற்போது தமிழகத்துக்கு வரக்கூடிய உபரிநீரையும் தடுக்க மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே 60 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று அங்குள்ள நீர்பாசனத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்.

    எனவே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும், பிரதமர் கர்நாடகத்துக்கு சாதகமாக இருப்பதை கண்டித்தும், விவசாயிகள், மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், வருகிற 11–ந்தேதி வேதாரண்யத்துக்கு பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது. இதில் காட்டுமன்னார் கோவிலில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ளவது. மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கடலூரில் நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்த அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் அருகே வார்க்கால்பட்டு பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் கையை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் கை உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கட்சியினர் சிலை முன்பு திரண்டனர். பின்னர் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய மர்ம மனிதர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

    தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலையை சேதப்படுத்திய மர்ம மனிதர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    வார்க்கால்பட்டு பகுதியில் எம்.ஜி.ஆர்.சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஊழல் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரத்தில கூறியுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணி வேட்பாளர் வக்கீல் சந்திரசேகரனை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:–

    மக்களிடம் நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது. கடலூர் சட்டசபை தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய கடினமாக உழைக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை இந்த உழைப்பு தொடர வேண்டும். அப்போது தான் புதிய ஆட்சி அமையும். கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி ஏற்படும்.

    50 ஆண்டுகள் அ.தி.மு.க., தி.மு.க. என்று மாறி, மாறி இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் இது வரை 3–வது அணி தலைவர்கள் என்று யாரும் இதுவரை வரவில்லை. இதற்கு மக்களை குறைகூற மாட்டேன். அரசியல் கட்சி தலைவர்கள் தான் காரணம்.

    50 ஆண்டுகளுக்கு பிறகு பலமான, வலுவான கூட்டணி உருவாகி இருக்கிறது. மக்கள் விரும்புகிற, எதிர்பார்த்த கூட்டணி நம்பிக்கை அடிப்படையில் உருவாகி இருக்கிறது.

    ஆகவே நாம் கடமையை முழுமையாக செய்ய வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க., ஊழல் கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த கடமையில் இருந்து நாம் தவறி விடக்கூடாது. நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும். அதாவது மனமாற்றம் தேவை.

    மனமாற்றம் இருந்தால் தான் ஆட்சி மாற்றம் ஏற்படும். நல்லாட்சி, மக்கள் விரும்புகிற கூட்டு ஆட்சி, கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும்.

    50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் நகரங்கள், கிராமப்புறங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடலூரில் பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளை 100 சதவீதம் நமது வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் செய்து தருவார்.

    தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. நாளை ஆளப்போகும் கட்சி. அ.தி.மு.க., தி.மு.க.வின் பணபலம், ஆட்சி பலம், அதிகார பலத்தை தாண்டி நம்மிடம் மக்கள் பலம் உள்ளது. ஆகவே நாம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.
    இலவச பொருட்களை தரமாட்டோம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியுமா? என்று பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
    கடலூர்:

    கடலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைக்கண்ணனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவரும், முதல்-அமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

    பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையைத்தான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் காப்பியடித்துள்ளன. ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. காப்பியடித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குத்தான். அ.தி.மு.க., தி.மு.க.வால் மதுவையும், ஊழலையும் ஒழிக்க முடியாது. ஊழல் அவர்களின் ரத்தத்தில் ஊறி போய் இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி பா.ம.க.வின் காலம். உழைக்கும் மக்களின் காலம்.

    இலவச பொருட்களை தரமாட்டோம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியுமா? ஆனால் நாங்கள் இலவச பொருட்களை தரமாட்டோம். அதற்கு பதிலாக இலவச கல்வி, சுகாதாரத்தை கொடுப்போம்.

    ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் மிச்சப்படுத்தி தரப்போகிறேன். எனவே ஓட்டுக்கு யாராவது பணம் கொடுத்தால் அதை நீங்கள் வாங்கக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரப்போகிறேன். உலக நாடுகளுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள முன்னேற்றத்தை இங்கே கொண்டு வர வேண்டும் என்ற ஆதங்கம் என்னிடம் உள்ளது. வேளாண்மையில் சிறந்து விளங்கும் இஸ்ரேல் நாட்டில் உள்ள வேளாண்மை தொழில்நுட்பத்தையும் உங்களுக்கு கொண்டு வருவேன்.

    தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள்தான் உள்ளன. எனவே நீங்கள் அனைவரும் வீடு, வீடாக சென்று வாக்குகளை சேகரித்து கடலூர் தொகுதியில் போட்டியிடும் பழ.தாமரைக்கண்ணனை வெற்றிபெற செய்ய வேண்டும். அவர் வெற்றிபெற்றால்தான் இந்த அன்புமணி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விருத்தாசலம் அருகே வெள்ளிக்கொடியை திருடிய போது சத்தம் போட்டதால் 4 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்த வாலிபர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி அருகே உள்ள ராமநாத புரத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம், விவசாயி. இவரது மகன் ஆகாஷ்வர்மா (வயது 4).

    இவரது வீட்டின் அருகே ஆதிகேசவ பெருமாள் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று இரவு குடிபோதையில் வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு ஆகாஷ் வர்மா மற்றும் சிறுவர்கள் விளையாடி கொண்டு இருந்தனர்.

    ஆகாஷ்வர்மா தனது இடுப்பில் வெள்ளியால் ஆன அரைஞாண் கயிறு (வெள்ளிக்கொடி) அணிந்திருந்தான்.

    இதைப்பார்த்த ஆதிகேசவ பெருமாள் அதை அந்த சிறுவனிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே அவர் சிறுவனை வீட்டிற்குள் அழைத்துச்சென்றார்.

    ஆகாஷ்வர்மாவின் அரைஞாண் கயிற்றை பறிக்க முயன்றார். இதைப் பார்த்த அந்த சிறுவன் சத்தம் போட்டான். இதில் ஆத்திரம் அடைந்த ஆதிகேசவபெருமாள் அவனை ஓங்கி அடித்தார். இதில் சிறுவன் மயங்கி விழுந்தான். உடனே ஒரு பித்தளை பார்த்திரத்திற்குள் சிறுவனை தூக்கிப்போட்டு மூடினார்.

    சிறுவன் ஆகாஷ்வர்மா வெகுநேரமாக வீட்டினுள் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சிறுவர்கள் ஆகாஷ்வர்மாவின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆதிகேசவ பெருமாள் வீட்டிற்கு சென்று சிறுவன் பற்றி விசாரித்தனர். அதற்கு அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

    சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டிற்குள் தேடியபோது அங்குள்ள பித்தளை பாத்திரத்திற்குள் சிறுவன் மூடி வைக்கப்பட்டிருந்தான்.

    மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    உடனே சிறுவன் ஆகாஷ்வர்மா உடலை அவனது வீட்டிற்கு கொண்டு வந்தனர். அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

    சிறுவனை தாக்கி கொலை செய்த ஆதிகேசவ பெருமாள் தன் வீட்டின் அருகே குடிபோதையில் அமர்ந்திருந்தார். அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினார்கள்.

    வலி தாங்க முடியாமல் அவர் தனது வீட்டிற்குள் ஓடினார். அங்கிருந்த விஷப்பாட்டிலை எடுத்து குடித்தார். வீட்டு முன்பு மயங்கி விழுந்தார்.

    ஆதிகேசவ பெருமாளை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து ஆலடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட ஆகாஷ்வர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குடிபோதையில் சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயலலிதாவின் இலவச அறிவிப்புகள் அனைத்தும் அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது என்று பண்ருட்டி பிரசாரத்தில் விஜயகாந்த் பேசினார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தே.மு.தி.க.– மக்கள் நல கூட்டணி– த.மா.கா. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களான பண்ருட்டி–சிவக்கொழுந்து (தே.மு.தி.க.), நெய்வேலி–ஆறுமுகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கடலூர்–சந்திரசேகரன் (தமிழ் மாநில காங்கிரஸ்), குறிஞ்சிப்பாடி–பாலமுருகன் (தே.மு.தி.க.) ஆகியோரை ஆதரித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:–

    தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களுக்கு காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். இங்கு வந்துள்ள கூட்டம் காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல. அவர்களாகவே வந்த கூட்டம்.

    ஆட்சியின்போது கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் பாருங்கள்.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் மழை வெள்ளம் வந்தபோது மின்சாரம் இல்லை. தானே புயல் தாக்கியபோது மின்சாரம் இல்லை.

    மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் வருவாய் இழந்து தவித்தனர். அப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்க வேண்டியதுதானே. அப்போது ஏன் அவர் அறிவிக்கவில்லை.

    குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச செல்போன் என்று கூறியுள்ளார். இதுபோன்று தேர்தல் அறிக்கையில் இலவசங்களை ஜெயலலிதா அள்ளி விட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் இலவச அறிவிப்புகள் அனைத்தும், அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது.

    தற்போது வீடுகளுக்கு யூனிட்டுக்கு 3 ரூபாயும், கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.7–ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாளை மின்கட்டணத்தை உயர்த்தினால், மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம் என்று அவர்கள் சொல்வார்களா? சொல்ல மாட்டார்கள்.

    தி.மு.க.வும், அ.தி.மு. க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று அன்றே காமராஜர் சொன்னார். அப்போது அவர் சொன்னதை சிலர் கேலி செய்தனர். அவர் சொன்னது இப்போதுதான் மக்களுக்கு தெளிவாக தெரிகிறது.

    இந்த சட்டமன்ற தேர்தலில் 6 தலைவர்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். ஆறுமுகத்துக்கு என்றுமே ஏறு முகம்தான். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நம்பாதீர்கள். இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான். அவர்களை நீங்கள்தான் அகற்ற வேண்டும். அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்று பல திட்டங்களுக்கு அம்மா பெயர் வைத்திருக்கிறார்களே. ஏன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை வைக்க வேண்டியது தானே. வைக்க மாட்டார்கள்.

    தேர்தல் நேரத்தில் மட்டும் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி, ஜெயலலிதா ஆதாயம் பெறுகிறார். தேவைப்பட்டால் மட்டுமே புரட்சி தலைவரின் புகைப்படத்தையும், அவரது பெயரையும் பயன்படுத்துகிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மே 16–ந் தேதி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கின்ற போர். தர்மத்தின் பக்கம் உள்ளவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேர்தல் தோல்வி பயத்தில் அ.தி.மு.க. இலவச திட்டங்களை அறிவித்திருப்பதாக விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
    கடலூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘தி.மு.க.வும். அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என காமராஜரே கூறியிருக்கிறார். ஆறு கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு என்றுமே ஏறுமுகம்தான். செல்போன் இல்லாமல் இப்போது யாரும் கிடையாது. ஆனால், அ.தி.மு.க. செல்போன் இலவசமாக கொடுக்க இருப்பதாக சொல்லியிருக்கிறது.

    பால் விலையை உயர்த்தி விட்டு தற்போது குறைப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் இலவசங்களை அறிவித்துள்ளது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அப்புறப்படுத்த வேணடிய விஷச் செடிகள்” என்றார்.
    காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெறுவது உறுதி, அவருக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று விஜயகாந்த் பேசினார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-

    ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள கட்சியின் தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இலவச செல்போன் உள்ளிட்ட இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார். அந்த போனை நீங்கள் டயல் செய்தால் கூட ‘அம்மா... அம்மா... என்றுதான் கேட்கும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற நல்லாட்சி தருவோம். ஏழை மக்களின் நல்வாழ்வுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்.

    எனவே நல்லாட்சி மலரவும், மக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தரவும் எங்களது கூட்டணிக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச்செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    இப்போது நடைபெறும் தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போராகும். இதில் தர்மம் நிச்சயம் வெல்லும். நமது கூட்டணி ஆட்சி வெல்லும்.

    காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் எனது நீண்டகால நண்பர். எனது பிறந்த நாளின் போது வாழ்த்து தெரிவிப்பார். மக்கள் நல கூட்டணிக்கு நான் வர வேண்டும் என்று விரும்பி அழைத்தார்.

    அவர் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. அவருக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

    அதன் பின்னர் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை காட்டி இந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ×