என் மலர்tooltip icon

    கடலூர்

    தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் தில்லை விடங்கன் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45), அ.தி.மு.க. பிரமுகர். இவர் இன்று காலை 7 மணி அளவில் வண்டிகேட் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறினார்.

    அவர் கையில் வைத்திருந்த பேனரில் இலங்கை இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க.வையும், நிருபர் கவிப்பிரியா படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரசையும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். ஊழல் கட்சிகளான இந்த கூட்டணிக்கு மக்கள் இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற வாசகம் இருந்தது.

    மேலும், வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் யாரும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என கோஷம் எழுப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மகேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்குமாறு கூறினர்.

    பின்னர் தீயணைப்புதுறையினர் மகேந்திரனை பத்திரமாக கீழே இறக்கினர். போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பண்ருட்டி அருகே லாரி மோதி பிளஸ்–2 மாணவர் பலியானார், அதிர்ச்சியில் அவரது தாய் மரணமடைந்தார்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). பண்ருட்டி அருகே காமாட்சி பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவர்களது மகன் புருஷோத்தமன் (17). நெய்வேலியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று காலை வேலு மணியும், தனலட்சுமியும் நெல்லிகுப்பத்தில் உள்ள உறவினர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    புருஷோத்தமனை வீட்டில் இருக்கும்படி கூறினர். ஆனால், அவர் நண்பர்களை பார்ப்பதற்காக மற்றொரு மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு புறப்பட்டார்.

    பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்ற போது எதிரே லாரி வேகமாக வந்தது.

    அந்த லாரி திடீரென்று புருஷோத்தமன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து புருஷோத்தமனை மீட்டு புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புருஷோத்தமனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து வேலுமணியும், தனலட்சுமியும் அங்கு விரைந்து வந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி துடித்தனர். வேலுமணி-தனலட்சுமி தம்பதியருக்கு புருஷோத்தமன் ஒரே மகன் ஆவார்.

    மகன் இறந்த துக்கம் தாங்காமல் வேலுமணியும், தனலட்சுமியும் புதுவையில் இருந்து பண்ருட்டி லிங்கா ரெட்டி பாளையத்திற்கு வந்தனர். தொடர்ந்து தனலட்சுமி அழுது கொண்டே இருந்தார்.

    விபத்து குறித்து புகார் செய்வதற்காக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு வேலுமணி சென்று விட்டார். அந்த சமயத்தில் திடீரென்று தனலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்த வேலுமணி, தனது மனைவி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    ஒரே நேரத்தில் மகனையும், மனைவியையும் இழந்த அவர் கதறி துடித்தது பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    விபத்து தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேப்பூர் அருகே டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து பக்தர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    வேப்பூர்:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தேர்கூடி நாடார் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 45). இவரும் இவரது உறவினரான முசிறியை அடுத்துள்ள நல்லநாயக்கன் பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் குடும்பத்தினரும் திருப்பதி செல்வதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டனர்.

    அந்த காரில் பழனிவேல் மனைவி ஜெயந்தி (42) அவரது மகன்கள் தமிழரசன்(17), சரவணன்(18) ராஜேந்திரனின் மனைவி கவிதா(40) அவரது மகன் பிரவீன்ராஜ்(13) உள்பட 9 பேர் சென்றனர். காரை பழனிவேல் ஓட்டினார். நள்ளிரவில் கார் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கவிதா, ஜெயந்தி, தமிழரசன், சரவணன், பிரவீன்ராஜ், பிரசாந்த், மாதேஸ்வரன், கார்த்திகேயன் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி இறந்தார். 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கவிதாவின் உடல்நிலை மோசமானதால் அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே கவிதாவும் இறந்தார். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைக்கண்ணன் பேட்டியில் கூறினார்.

    கடலூர்:

    போராட்டத்தில் ஈடுபட்ட பழ.தாமரைக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா செய்ய உள் ளார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் கொடுத்துள்ளோம்.

    இது சம்பந்தமாக ஆன்லைன் மூலமாகவும் புகார் கொடுத்து உள்ளோம்.ஆனால் இதுவரை தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பிட்ட அதிகாரிகள் அ,தி.மு.கவிற்கும், தி.மு.க விற்கும் ஆதரவாக செயல்படுகிறார்கள்.

    தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். மேலும் தேர்தல் பார்வையாளர்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லோடு குடம் மக்களுக்கு கொடுக்க இருந்ததை பிடித்து கொடுத்து உள்ளேன்.

    அதற்கான ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி உள்ளேன். இன்று காலை ஆளுங்கட்சியினர் பொதுமக்களுக்கு பூத் சிலிபுடன் பணம் வழங்கினார்கள். அப்போது நாங்கள் பணம், லைசென்ஸ், செல்போன் ஆகியவற்றை பிடித்து உள்ளோம். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம்.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.யாரிடம் சென்று புகார் கொடுப்பது என்று தெரிய வில்லை.தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். மேலும் பதட்டமான வாக்குசாவடிகள் குறித்து தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தல் நியாயமாக நடப்பதற்கு வழிவகை இல்லை. இதனால் மாவட்ட தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும்.

    கடலூர் தொகுதி முழுவதும் பண பட்டுவாடா நடந்து உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் எந்த மக்களையும் நேரில் சந்திக்காத 2 திராவிட கட்சிகளும் பணத்தை வைத்து கொண்டு மக்களிடேயே பணம் வழங்கி வாக்கு சேகரிக்கிறார்கள்.

    ஆனால் பொதுமக்கள் இதற்கு அடிப்பணிய மாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது சட்ட ரீதியான குற்றம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரி உட்பட்ட அனைத்து அதிகாரிகளும் பணப்பட்டுவாடா செய்பவர்களிடம் கைகோர்த்து கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    மேலும் அ.தி.மு.க–தி.மு.க வினர் மக்களுக்கு கொடுப்பதற்கு பணம் பதுக்கி உள்ளார்கள்.இதனை கண்டு பிடித்து பறிமுதல் செய்ய வேண்டும். எனக்கு நியாயம் வேண்டும். மேலும் நாங்கள் இது சம்பந்தமாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஆகையால் நியாயமான தேர்தல் நடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் தோல்வி பயத்தில் ஜெயலலிதா மக்களை சந்திக்கிறார் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியில் கூறினார்.

    சிதம்பரம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சிதம்பரம் வந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க– காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதுடன் தமிழகம் முழுவதும் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் பூரண மது விலக்கை வர வேற்கிறார்கள். அதனை கருணாநிதி ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றுவார்.

    மேலும் விவசாயகடன், கல்வி கடன் ரத்து என்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    ஜெயலலிதா கடந்த 5 ஆண்டு காலத்தில் பால், பஸ், மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளார்.

    மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், காஞ்சிபுரம் பகுதி மக்களை நேரில் சென்று சந்திக்காத ஜெயலலிதா தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் மக்களை நேரில் சென்று சந்திக்கிறார்.

    ஆனால் மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதனை தேர்தலில் கண்டிப்பாக காட்டுவார்கள். அம்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டது கண்டிக்கதக்கது.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மீது உள்ள கோபத்தில் தான் அ.தி.மு.க. வேட்பாளர்களை மக்கள் தொகுதிக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

    பிரசாரத்தின் போது விஜயகாந்த் கண்டபடி தாக்குவதால்தான் வைகோ, திருமாவளவன் தலைப்பாகை அணிந்துள்ளனர்.

    தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு வராததால் எங்கள் தலை தப்பியது. என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நான் சட்டப் படி எதிர்கொள்வேன். அதே சமயம் கவர்னரையும் வழக்கில் குறுக்கு விசாரணை செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூரில் இன்று பிரசாரம்: அமைச்சர் சம்பத் வேன் மீது செருப்பு வீச்சு

    கடலூர்:

    கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் சம்பத் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை 10.15 மணி அளவில் தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது அந்த பகுதி மக்கள் எங்களுக்கு வெள்ள நிவாரணம் ஏதும் வழங்கவில்லை என்று அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் சம்பத் அவர்களை சமரசம் செய்தார்.

    பின்னர் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் அமைச்சர் சம்பத்தின் வேன் மீது செருப்பை வீசினார். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் அந்த வாலிபரை அடித்து உதைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலைவீசுகிறது என காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் குஷ்பு கூறியுள்ளார்.
    காட்டுமன்னார்கோவில்:

    காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மணிரத்தினம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    நான் இதுவரை 30 தொகுதி மக்களை சந்தித்து பிரசாரம் செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய அலை வீசுகிறது. அந்த அலை ஆட்சி மாற்றத்திற்கான அலை.

    முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அலை. கொடநாட்டிற்கு நிரந்தரமாக ஓய்வெடுக்க அனுப்பி வைக்கும் அலை.

    கருணாநிதி 6–வது முறையாக முதல்–அமைச்சராக ஏற்பட்டுள்ள அலை. 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் சாதி பிரச்சினை அதிகரித்துள்ளது. அனைவரும் சம நல்லிணக்கத்தோடு வாழும் வாய்ப்பு கலைஞர் ஆட்சியில் மட்டும்தான் நடக்கும். உங்களுக்காக வேலை செய்கின்ற ஒருவர் தமிழ்நாட்டை ஆளவேண்டும். அவர்தான் கருணாநிதி. அவர் ஆட்சி பொறுப்பேற்றதும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். திட்டங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×