என் மலர்
செய்திகள்

தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்: பா.ம.க. வேட்பாளர் பழ.தாமரைக்கண்ணன் பேட்டி
கடலூர்:
போராட்டத்தில் ஈடுபட்ட பழ.தாமரைக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடா செய்ய உள் ளார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் கொடுத்துள்ளோம்.
இது சம்பந்தமாக ஆன்லைன் மூலமாகவும் புகார் கொடுத்து உள்ளோம்.ஆனால் இதுவரை தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பிட்ட அதிகாரிகள் அ,தி.மு.கவிற்கும், தி.மு.க விற்கும் ஆதரவாக செயல்படுகிறார்கள்.
தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். மேலும் தேர்தல் பார்வையாளர்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லோடு குடம் மக்களுக்கு கொடுக்க இருந்ததை பிடித்து கொடுத்து உள்ளேன்.
அதற்கான ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி உள்ளேன். இன்று காலை ஆளுங்கட்சியினர் பொதுமக்களுக்கு பூத் சிலிபுடன் பணம் வழங்கினார்கள். அப்போது நாங்கள் பணம், லைசென்ஸ், செல்போன் ஆகியவற்றை பிடித்து உள்ளோம். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.யாரிடம் சென்று புகார் கொடுப்பது என்று தெரிய வில்லை.தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். மேலும் பதட்டமான வாக்குசாவடிகள் குறித்து தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தல் நியாயமாக நடப்பதற்கு வழிவகை இல்லை. இதனால் மாவட்ட தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும்.
கடலூர் தொகுதி முழுவதும் பண பட்டுவாடா நடந்து உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் எந்த மக்களையும் நேரில் சந்திக்காத 2 திராவிட கட்சிகளும் பணத்தை வைத்து கொண்டு மக்களிடேயே பணம் வழங்கி வாக்கு சேகரிக்கிறார்கள்.
ஆனால் பொதுமக்கள் இதற்கு அடிப்பணிய மாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது சட்ட ரீதியான குற்றம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரி உட்பட்ட அனைத்து அதிகாரிகளும் பணப்பட்டுவாடா செய்பவர்களிடம் கைகோர்த்து கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
மேலும் அ.தி.மு.க–தி.மு.க வினர் மக்களுக்கு கொடுப்பதற்கு பணம் பதுக்கி உள்ளார்கள்.இதனை கண்டு பிடித்து பறிமுதல் செய்ய வேண்டும். எனக்கு நியாயம் வேண்டும். மேலும் நாங்கள் இது சம்பந்தமாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஆகையால் நியாயமான தேர்தல் நடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






