என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் இன்று காலை அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலைய தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் வினோத்குமார் (வயது21), சதீஷ்குமார் (19). இவர்களில் வினோத்குமார் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சதீஷ்குமார் மயிலம் அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இன்று காலை வினோத் குமார் வீட்டில் குளித்துக் கொண்டு இருந்தார். சதீஷ்குமார் கல்லூரி செல்வதற்காக உடை மாற்றிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் 10 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாளுடன் திடீரென்று வீட்டு முன்பு திரண்டனர்.

    அவர்களை பார்த்ததும் வினோத்குமாரின் பாட்டி கோசலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அந்த கும்பலிடம் நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்தீர்கள் என்று கேட்டார்.

    அதற்கு அவர்கள் பதில் கூறவில்லை. வேகமாக வீட்டிற்குள் செல்ல முயன்றனர். கோசலை அவர்களை தடுத்தார். ஆனால் அவர்கள் கோசலையை கீழே தள்ளி விட்டு வீட்டிற்குள் புகுந்தனர்.

    ஆவேசமாக கொலை வெறியுடன் காணப்பட்ட அந்த கும்பல் வீட்டில் உடை மாற்றிக்கொண்டிருந்த சதீஷ்குமாரை வெட்டுவதற்காக பாய்ந்தனர். அவர் வீட்டிற்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை மடக்கி பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் சதீஷ்குமார் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்படி இருந்தும் அந்த கொலை வெறிக்கும்பலின் ஆத்திரம் தீரவில்லை.

    வினோத்குமார் எங்கே? என்று தேடினர். அவர் குளியலறையில் குளித்து கொண்டிருப்பதை அறிந்து அங்கே சென்றனர். குளியல் அறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். குளித்துக்கொண்டிருந்த வினோத்குமாரை அரிவாளால் வெட்டினர்.

    இதில் வினோத்குமார் அதே இடத்தில் பிணமானார். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடியது.

    இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் கொலைக்கும்பலை சேர்ந்தவர்கள் ரோட்டில் வேகமாக ஓடினார்கள். போலீசார் அவர்களை விரட்டி சென்று 10 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    போலீஸ் நிலையம் அருகே இன்று காலை நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    32 ஆண்டுகளுக்கு பிறகு பண்ருட்டி தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இதனால் அ.தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சத்யா பன்னீர்செல்வம் 72,353 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    தி.மு.க.கூட்டணி சார்பில் போட்டியிட்ட விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர் பொன்.குமார் 69,225 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

    பண்ருட்டி தொகுதியில் கடந்த 1984–ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி தொகுதி கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பண்ருட்டி தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இதனால் அ.தி.மு.க. வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.
    சென்னை:

    காட்டுமன்னார் கோவில் தனித் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தோல்வியடைந்துள்ளார்.

    அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட வெறும் 87 வாக்குகள் குறைவாக பெற்று திருமாவளவன் தோல்வியடைந்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் வானூர் தொகுதியில் பின் தங்கியுள்ளார்.
    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றும், பலத்த மழையும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    கடலூர்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றும், பலத்த மழையும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் உள்ள 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பன்னோக்கு பயன் பாட்டு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் மின்வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    பலத்த காற்று, மழை தொடர்பாக கடலோர பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    கடலோர பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும், ஆஸ்பத்திரிகளில் போதிய மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். விடுமுறை எடுத்திருந்த அதிகாரிகள் அதை ரத்து செய்து விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்கவும், சாலையில் மரங்கள் விழுந்தால் விரைவாக அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைத்துறையினர் ரம்பம், பொக்லைன் எந்திரங்கள் போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி விட்டு புதிய மின்கம்பங்களை நடுவதற்கான ஏற்பாடுகளை உடனுக்குடன் மின்வாரியம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு பெய்த மழையின்போது, அவசர தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக அதிகாரிகளுக்காக ஒரு ‘வாட்ஸ்அப்’ குழு தொடங்கப்பட்டது. அந்த ‘வாட்ஸ்அப்’ குழு தொடர்ந்து செயல்பட உள்ளது.

    தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினரின் வாகனங்களிலும், நிலை கண்காணிப்புக்குழுக்களின் வாகனங்களிலும் உள்ள ஜி.பி.எஸ். கருவிகளை புயல் அபாயம் கடந்த பிறகு அப்புறப்படுத்தவும் அதுவரை ஜி.பி.எஸ்.கருவிகள் அதிகாரிகளின் வாகனங்களிலேயே இருக்கவும் கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
    கடலூர்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே லேசான மழை பெய்தது. இரவு முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சம்கொல்லை கிராமத்தில் சாலை ஓரத்தில் நின்ற புளியமரம் வேரோடு சாய்ந்தது. விருத்தாசலத்தில் கனமழை காரணமாக அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த நெல்மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்தன.

    கடலூரில் நேற்று காலை 8 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மஞ்சக்குப்பம், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், தேவனாம்பட்டினம், துறைமுகம், தாழங்குடா ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது.

    கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருகி ஓடியது.

    ரெட்டிச்சாவடி, மேல் அழிஞ்சுப்பட்டு, கீழ்அழிஞ்சுப்பட்டு, பள்ளிப்பட்டு, கீழ்குமாரமங்கலம், தூக்கனாம்பாக்கம், நல்லாத்தூர், அழகியநத்தம் உட்பட்ட கிராமங்களில் விடிய, விடிய மழை பெய்தது.

    ரெட்டிச்சாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கின. இதில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் சில பகுதிகளில் மழை நீர் தேங்கின.

    கடலூர் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 34.8 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. கடலூரில் கடல் இன்று அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

    அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்தன. புயல் எச்சரிக்கை காரணமாக கடலூரில் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை பகுதிகளில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. விழுப்புரத்தில் காலை 9 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது.

    தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. காலை 11.30 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் மழை பெய்தது.

    விழுப்புரம் நேருஜி சாலை, விழுப்புரம் புதுவை சாலை, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதேபோல் கீழ் பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதே போல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது.

    கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். நேற்று பெய்த மழையினால் வெப்பம் தணிந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லிக்குப்பம் அருகே பா.ம.க. வேட்பாளர் முத்துக்கிருஷ்ணன் கார் மீது கல்வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி பா.ம.க. வேட்பாளர் முத்துக்கிருஷ்ணன். இவர் இன்று காலை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டு வந்தார். மதியம் 11 மணி அளவில் அவர் நெல்லிக்குப்பம் அருகே வானமாதேவி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை பார்ப்பதற்காக ஆதரவாளர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வாலிபர்கள் சிலர் திடீரென்று கார் மீது சரமாரியாக கல்வீசினார்கள். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    கல்வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது பற்றி நடுவீரப்பட்டு போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர். கல்வீசிய கும்பலை தேடிவருகிறார்கள்.

    பா.ம.க. வேட்பாளர் கார் மீது கல்வீசப்பட்டதை அறிந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வானமாதேவி பகுதிக்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    மோதல் எதுவும் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    அரவக்குறிச்சி தேர்தல் 23–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல. அன்றைய தினம் தேர்தல் நடந்தால் ஆளும்கட்சியின் குறுக்கீடுகள் அதிகமாக இருக்கும் என திருமாவளவன் கூறினார்.

    சிதம்பரம்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

    தமிழக சட்டசபை தேர்தலில் ஜனநாயக செயல்பாடு குறைந்து விட்டது. பணநாயகம் அதிகரித்து விட்டது. தேர்தல் முடிந்தபிறகு இதுதொடர்பாக மக்கள் நலக்கூட்டணி சார்பில் டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வோம்.

    தமிழகத்தில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வருகிற 23–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல. அன்றைய தினம் தேர்தல் நடந்தால் ஆளும்கட்சியின் குறுக்கீடுகள் அதிகமாக இருக்கும்.

    எனவே 23–ந் தேதி தேர்தல் நடத்துவதை தேர்தல் கமிஷன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக 18–ந் தேதி அரவக்குறிச்சிக்கு தேர்தல் நடத்த வேண்டும். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்ப உள்ளோம்.

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தள்ளி வைத்தது போல் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலையும் தள்ளி வைக்க வேண்டும். அங்கு ஆளுங்கட்சியினர் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர்.

    அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையர் துணையோடு அத்துமீறல்கள் தொடர்ந்து நடக்கிறது.

    உளுந்துர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தையும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் என்னையும் தோற்கடிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் குறிவைத்து செயல்படுகின்றனர். இது கண்டிக்க தக்கது. மக்களுக்கு எங்களை பற்றி தெரியும். எங்களை வெற்றி பெறச் செய்வார்கள்.

    தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. – தி.மு.க.வினரின் அத்துமீறல் அதிகமாக உள்ளது. இதையும் மீறி புதிய வாக்காளர்கள் 1½ கோடி பேர் மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

    தமிழகத்தில் தேர்தல் முறையாக நடைபெற வில்லை இதுதொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×