என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் சிறையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதையடுத்து சிறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது விசாரணை கைதிகளான விருத்தாசலம் மங்கலம்பேட்டையை சேர்ந்த தண்டாயுதபாணி, விழுப்புரம் மாவட்டம் வெளுத்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (27) ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் வைத்திருந்த செல்போனை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டியில் முன்விரோதம் காரணமாக தி.மு.க. பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துவராஜ் (வயது 57). தி.மு.க. பிரமுகர்.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (48) என்பவருக்கும் கடந்த ஒரு மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு கிறிஸ்துவராஜ் வீட்டில் இருந்தார். அவருடன் அவரது தம்பி செங்கோல்ராஜா, உறவினர்கள் மார்கல்சிட்டா, டீட்டோ ஆகியோரும் இருந்தனர்.

    அப்போது சண்முகம் உள்பட 8 பேர் கிறிஸ்துவ ராஜ் வீட்டிற்கு சென்றனர். கிறிஸ்துவராஜிடம் தகராறு செய்தனர். பின்னர் இது மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த 8 பேரும் கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் கிறிஸ்துவ ராஜை சரமாரியாக தாக்கினர்.

    இதை தடுக்க முயன்ற செங்கோல்ராஜா, மார்கல்சிட்டா, டீட்டோ ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தாக்குதலில் கிறிஸ்துவ ராஜ் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்துவராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்குக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கிறிஸ்துவராஜின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது.

    இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தி.மு.க. பிரமுகர் கொலை தொடர்பாக சண்முகம் அவரது மகன்கள் பாலுமகேந்திரன், ராமச்சந்திரன், உறவினர்கள் தினேஷ்குமார், சக்திவேல் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற ராஜீவ்காந்தி, தேவா, சிவராமன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் பண்ருட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி கணேஷ் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தி.மு.க. பிரமுகர் கிறிஸ்துவராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த தி.மு.க.வினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர். அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க எனதிரிமங்கலத்தில் 100-க்கும்மேற் பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்கு ஜான்குமாருக்கு ரூ.100 கோடி கொடுத்ததாக கூறுவது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    பண்ருட்டி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று பண்ருட்டி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரிநீர் பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு மதித்து செயல்படவேண்டும். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    தமிழர்களின் கட்டிடங்கள், அலுவலகங்கள், வாகனங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். காவிரிநீர் பிரச்சினையில் தற்கொலை செய்வது சரியான தீர்வு ஆகாது.

    நம்முடைய உரிமையை நாம் கேட்டு போராடி பெற வேண்டும். புதுவையை பொறுத்தவரை காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்போம்.

    புதுவையில் சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சி 100 நாட்களை கடந்து விட்டது. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். தொழிற்சாலைகள் தொடங்க 30 நாளில் அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைவிட புதுவையில் தொழிற்சாலைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. புதுவை மக்கள் ஆச்சரியப்படும் வகையில் மக்கள் முன்னேற்றத்துக்கு புதிய திட்டங்களை செயல் படுத்த உள்ளோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நாராயணசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: நெல்லித்தோப்பு தொகுதியில் நீங்கள் போட்டியிடுவதற்காக ஜான்குமார் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதற்கு நீங்கள் ரூ.100 கோடி கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளதே?

    பதில்: எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரம் இல்லாதது. இது அபத்தமான குற்றச்சாட்டு. இதில் உண்மை இல்லை.

    கே: ஜான்குமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளார்களே?

    ப: ஜான்குமார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததற்கும், அவர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித்துறையினர் எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கின்றன என்று கூறி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திட்டக்குடி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பெண் பரிதாபமாக துடிதுடித்து உயிர் இழந்தார்.
    பெண்ணாடம்:

    திட்டக்குடி அருகே உள்ள செவ்வேடி பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 42). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள்(45) இவர்கள் இருவரும் நெடுங்குளத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலைபார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அவர்கள் இன்று காலை வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டனர். செவ்வேடி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றனர். நீண்டநேரமாகியும் பஸ் வராததால் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டு பச்சையம்மாளும், பொன்னமாளும் சென்றனர்.

    செவ்வேடி நெடுங்குளம் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தது. முன்னாள் சென்ற டிராக்டரை முந்திசெல்ல முயற்சி செய்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் கீழே விழுந்தனர்.

    இந்தவிபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொன்னம்மாள் மீது டிராக்டர் ஏறிச்சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார்.

    பச்சையம்மாள் மீதும் டிராக்டர் ஏறியது அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொன்னம்மாள் உடலை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பச்சையம்மாளுக்கு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்ற 11 பெண்கள் உள்பட 42 பேர் கைது செய்தனர்.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் அருகே சி.என்.பாளையம் காலனி பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சாலைவசதி சரிவர இல்லை. இதனை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று சி.என்.பாளையத்தில் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் ஒன்று சேர்ந்து சுடுகாட்டுக்கு பாதையை சீரமைக்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்கள் நடுவீரப்பட்டு சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், மறியல் செய்ய முயன்றதாக கூறி, 11 பெண்கள் உள்பட 42 பேரை கைது போலீசார் செய்து, நடுவீரப்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    தீவைத்து கொளுத்தப்பட்ட தமிழக வாகனங்களுக்கு கர்நாடக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் இன்று கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி நீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனை அமல்படுத்தவிடாமல் தடுக்க வேண்டும் என நினைத்து கர்நாடகாவில் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    தமிழர்களின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களும் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். கர்நாடக கலவரத்தில் தமிழர்களின் உடமைகள் ரூ.100 கோடி அளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். கர்நாடகத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக, தமிழக அரசுகளின் மெத்தனப்போக்கே காரணம்.

    விவசாயிகள் தான் மக்களின் உயிர்நாடி. விவசாயிகளின் ஜீவாதார பிரச்சனையை தீர்க்கும் வகையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். கர்நாடக, தமிழக முதல்வர்களை பிரதமர் மோடி அழைத்து பேச வேண்டும். கர்நாடகம், தமிழகம் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். வருகிற 16-ந் தேதி அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் த.மா.கா. பங்கேற்கும்.

    உமாபாரதி, சதானந்தகவுடாவின் பேச்சு கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது. காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் செயல்படுகிறார்கள். பிரதமர் மோடி அவர்களை கண்டிக்க வேண்டும். கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கர்நாடக முதல்வர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களிடையே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நெய்வேலியில் உள்ள கன்னடர் சங்க அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே நெய்வேலி கன்னடர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் நெய்வேலி என்.எல்.சி.யில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதைத் தொடர்ந்து தமிழகத்தில் கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகள், பஸ்கள் தாக்கப்பட்டு வருகின்றன.

    இதைதொடர்ந்து நெய்வேலியில் உள்ள கன்னடர் சங்க அலுவலகமும் தாக்கப்படலாம் என்று அதன் நிர்வாகிகள் கருதினர். இதையொட்டி கன்னடர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நெய்வேலியில் உள்ள கன்னடர் சங்க அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    துணைபோலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் 500 போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
    நெய்வேலி என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவில் தாக்கப்படும் தமிழர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடகாவுக்கு நெய்வேலி என்.எல்.சி.யிலிருந்து மின்சாரம் அனுப்பக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருத்தனர்.

    அதன்படி இன்று காலை அவர்கள் நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே திரண்டனர். அங்கிருந்து என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாநில துணைபொதுச் செயலாளர் கண்ணன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, சின்னதுரை முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்பாட்டத்துக்கு பின்னர் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவபொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அங்கிருந்து தடையை மீறி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். இதைத்தொடர்ந்து 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த போராட்டத்தை யொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேப்பூர் அருகே நடுரோட்டில் கனரக லாரி பழுதாகி நின்றதால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேப்பூர்:

    ராணிப்பேட்டையில் இருந்து நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு ராட்சத இரும்பு தூணை ஏற்றிக்கொண்டு கனரக லாரி புறப்பட்டது. அந்த லாரி இன்று காலை கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு அருகே வந்தபோது திடீரென பழுதானது.

    இதனால் சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, விருத்தாசலம் வழியாக செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் சேப்பாக்கம் வழியாக மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். லாரியை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. லாரி பழுதாகி நின்றதால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூருக்கு செல்வோர் பெரும் அவதியடைந்தனர்.

    கடலூரில் கோவில் குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் நத்தவெளிரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 60) தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் உண்டு. நேற்று இரவு குமார் குடிபோதையில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே உள்ள தெப்பகுளத்துக்கு சென்றார். குளத்தின் படிக்கட்டில் நின்று கை,கால்களை கழுவிக் கொண்டு இருந்தார்.

    திடீரென்று கால் தவறி குளத்தில் விழுந்தார். அவரால் நீந்த முடியவில்லை. சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இன்று காலை குளத்திற்கு சென்ற பொதுமக்கள் தண்ணீரில் முதியவர் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குளத்தில் மூழ்கி பலியான குமாரின் உடலை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை. இவரது மகள் கோமதி(வயது 20). இவர் கடலூர் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி(கணிதம்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 9-ந் தேதி கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. எனவே மாணவியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர். மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புஷ்பலதாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்பாட்டம் செய்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேடு கிராமத்தைச் சேர்ந்த நர்ஸ் புஷ்பலதா(21). தனசேகர்(22) என்பவர் காதலிக்குமாறு வலியுறுத்தி அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புஷ்பலதாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்பாட்டம் செய்தனர். விருத்தாசலம் வட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.

    வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகர செயலாளர் சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் காமராஜ், வட்டக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், கோவிந்தன், இளங்கோ, குமரகுரு, அமிர்தலிலிங்கம், அம்பேத்கர், அன்புச்செல்வி, நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×