என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் அருகே குடிநீர் தொட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூரை அடுத்துள்ளது பெரியகங்கணாங்குப்பம். இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் இருந்து அந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வீடுகளில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த தண்ணீரில் அதிகளவு துர்நாற்றம் வீசியது.

    சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ள இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களில் சிலர் தொட்டியின் மேல் ஏறி பார்த்தனர்.

    அப்போது தொட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே ரெட்டிச்சாவடி போலீசுக்கும், கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் பிணத்தை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

    பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து பிணத்தை தண்ணீர் தொட்டிக்குள் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், குடிநீர் தொட்டி மூலம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

    மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் உத்தரவின் பேரில் டாக்டர்கள் குடி நீரை பருகிய அந்த பகுதி மக்களுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

    குடிநீர் விநியோகம் செய்யும் தொட்டியில் பிணம் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதல் கணவருடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நேமம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகள் ரஞ்சிதா (வயது 21). இவருக்கும், விருத்தாசலம் அருகேயுள்ள மாத்தூரை சேர்ந்த சின்னசாமி மகன் குமரசாமி (24)-க்கும் கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் ரஞ்சிதா திடீரென மாயமானார்.

    இது குறித்து செல்வநாதன் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ரஞ்சிதா தனது காதல் கணவருடன் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    போலீசாரிடம் ரஞ்சிதா கூறுகையில், நானும், தீவளூர் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ் என்ற சாஸ்தா (24)வும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால் எனது பெற்றோர், எனக்கு வேறொருவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்து விட்டனர். இருந்தபோதிலும் எப்படியாவது எனது காதலனை கரம்பிடிக்க நினைத்தேன்.

    அதன்படி வீட்டை விட்டு வெளியேறி நானும், செந்தமிழும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். போலீசார் தேடுவதை அறிந்ததும் தஞ்சம் அடைந்தேன் என்றார்.

    இதையடுத்து இருவீட்டு பெற்றோரையும் நேரில் அழைத்து போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ரஞ்சிதா, அவரது காதல் கணவருடன் குடும்பம் நடத்த புறப்பட்டுச் சென்றார்.

    விருத்தாசலம் அருகே மழைபொழிய வேண்டி உருவபொம்மை எரித்து கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் தற்போது விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். போதிய அளவில் பருவ மழை பெய்யாததால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.

    மழை பொழிந்தால் தான் உளுந்து பயிர்களை காப்பாற்ற முடியும் என்கிற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

    இதனால் குப்பநத்தம் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மழைபொழிய வேண்டி உருவ பொம்மை செய்தனர். பின்னர் அதனை பாடையில் வைத்து மேளதாளங்கள் முழங்க வருண பகவானை வேண்டி கிராமம் முழுவதும் வீதி, வீதியாக ஊர்வலமாக இழுத்துச்சென்றனர்.

    அதைத்தொடர்ந்து அந்த உருவபொம்மையை சுடுகாட்டில் கொண்டு சென்று பிணத்தை எரிப்பது போன்று எரித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.
    பிரதமர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை வாபஸ் பெற கோரி பண்ருட்டியில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பண்ருட்டி, நவ. 21-

    பிரதமர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை வாபஸ் பெற கோரி பண்ருட்டியில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பண்ருட்டி நகர காங்கிரஸ் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வல்லம் ராஜன், முன்னாள் நகர மன்ற துணைதலைவர் கோதண்டபாணி, நெல்லிக்குப்பம் நகர தலைவர் திலகர், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் மணி, மாவட்ட துணை தலைவர்கள் மெகபுக்கான், ‌ஷபி, மாவட்ட செயலாளர் ஐ.கே.மூர்த்தி, முன்னாள் நகர காங்கிரஸ் பொது செயலாளர் நாகராஜன், நகர காங்கிரஸ் செயலாளர் ரவி, வட்டார தலைவர்கள் தருமசிவம், குணசேகரன், புதுப்பேட்டை நகர தலைவர் குமாரசாமி மற்றும் நகர வட்டார நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    சிதம்பரத்தில் சிவனடியார்கள்-போலீசார் மோதிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் தலைமையில் நடராஜர் கோவிலுக்கு 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிதம்பரத்தில் உள்ள 4 வீதிகள் வழியாக ஊர்வலாக சென்றனர்.

    சிதம்பரம் கீழவீதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் தெற்கு, மேற்கு வீதியை வந்தடைந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் வந்த ஊர்க்காவல் படையினர் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு வழிவிட்டு செல்லுமாறு ஊர்வலத்தில் சென்றவர்களிடம் கூறினர்.

    இதில் ஆத்திரடைந்த சிவனடியார்களில் சிலர் ஊர்க்காவல் படையினருடன் வாக்குவாதம் செய்தனர். இதை பார்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிவனடியார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    தொடர்ந்து சிவனடியார்களில் சிலர் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் பேசியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஊர்வலம் வடக்கு வீதி வழியாக கீழ வீதியை அடைந்து கோவிலை சென்றடைந்தது.

    சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பணம் வராததால் ஏ.டி.எம். எந்திரத்துக்கு ஆள் உயர மாலை அணிவித்து, சங்கு ஊதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாற்றுத்திறானிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ஜங்‌ஷன் சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு தனி கட்டிடத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 3 நாட்களாக இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரவில்லை.

    பணம் எடுப்பதற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கப்படாததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாற்றுத்திறானிகள் சங்கத்தினர் இன்று காலை அந்த இடத்தில் திரண்டனர்.

    அவர்கள் ஏ.டி.எம். எந்திரம் செயல்படாமல் உள்ளது என்று கோ‌ஷம் எழுப்பியவாறே அந்த எந்திரத்துக்கு ஆள் உயர மாலை அணிவித்து, சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்து விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லிக்குப்பத்தில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை கொள்ளையடித்த 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள் மற்றும் 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி சற்குரு நகரை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 62). மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி மல்லிகா(53), இவரது மகள்கள் சுதா(29), பிரித்தி(25) நேற்று இரவு 10 மணியளவில் ராஜாராம் தனது வீட்டில் மனைவி மற்றும் மகள்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு வாலிபர் வீட்டின் கதவை தட்டினார். ராஜாராம் எழுந்து சென்று கதவை திறந்தார். அந்த வாலிபர் ஒரு குறிப்பிட்ட இடத்தின் முகவரியை கேட்டார். அந்த நேரத்தில் 4 பேர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களை ராஜாராம் தடுத்தார்.

    உடனே அவர்கள் கையில் இருந்த தடியால் ராஜாராமை தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து மல்லிகா வெளியே வந்தார். அவரை மர்ம வாலிபர்கள் மிரட்டினர். அவரது வாயில் துணியை திணித்தனர். வீட்டின் முன்கதவை பூட்டி உள்தாழ்பாள் போட்டனர்.

    பின்னர் மர்ம மனிதர்கள் ராஜாராமை மிரட்டி அவர் கையில் இருந்த மோதிரத்தையும், மல்லிகாவின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியையும் பறித்துக்கொண்டனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதைப்பார்த்ததும் சுதாவும், பிரித்தியும் வீட்டின் உள்அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அங்கிருந்து செல்போன் மூலம் நெல்லிக்குப்பம் போலீசாருக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். கதவை தட்டி மர்ம மனிதர்களை கதவை திறக்கும்படி கூறினர். ஆனால் அவர்கள் வெளியே வர மறுத்தனர். உடனே நீங்கள் வெளியே வர மறுத்தால் துப்பாக்கி சூடு நடத்துவோம் என்று போலீசார் எச்சரித்தனர். அப்போதும் அவர்கள் வெளியே வரவில்லை.

    இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் நின்ற மர்மமனிதர்கள் 4 பேரையும் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து மேலும் 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். இதையொட்டி புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த விமல்(19), சாலமன்(17), விக்னேஷ்(17), கணேஷ்(28), பாலாஜி(20), முத்தியால்பேட்டையை சேர்ந்த அஜித்(17), புதுவை முத்தமிழ் நகரை சேர்ந்த கோபிநாத்(29) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் மற்றும் 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கொள்ளை தொடர்பாக திருகண்டேஸ்வரத்தை சேர்ந்த சிவக்குமார், அரியாங்குப்பத்தை சேர்ந்த மற்றும் ஒரு வாலிபர் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான கோபிநாத் ஆட்டோ டிரைவர் ஆவார். கோபிநாத்தும், சிவக்குமாரும் கொள்ளையர்களுக்கு எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்பது குறித்து தகவல் கொடுத்தது தெரியவந்துள்ளது.

    கைதான 7 பேருக்கும் வேறு கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பொது சிவில் சட்டத்தை ஆதரித்து இந்து மக்கள் கட்சியினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தியதால் தீட்சிதர்களுக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சிதம்பரம்:

    மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து இந்து மக்கள் கட்சியினர் பண்ருட்டியில் கடந்த 7-ந் தேதி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை இந்து மக்கள் கட்சியினர் சிதம்பரத்தில் முடிக்க திட்டமிட்டனர்.

    அதன்படி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிழக்குகோபுரம் அருகே இந்து மக்கள் கட்சியினர் ஒன்று கூடி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். இதில் தஞ்சை மண்டல அமைப்பாளர் சாமிநாதன், கடலூர் மாவட்ட தலைவர் தேவா, மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன், சிதம்பரம் நகர தலைவர் செந்தில், நகர செயலாளர் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இந்து மக்கள் கட்சியினர் தங்களது கோரிக்கைகளை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினர். இதனைப்பார்த்த கோவில் தீட்சிதர்கள் கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்து மக்கள் கட்சியினருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து, இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அனுமதியின்றி கோவிலுக்குள் கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது என்று போலீசார் கூறினர்.

    இதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் கோவிலை விட்டு வெளியேறி கீழசன்னதியில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் கடலூர் மாவட்ட டாஸ்மாக்கடைகளில் மது விற்பனை 25 சதவீதம் குறைந்தது.
    கடலூர்:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8–ந்தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

    மேலும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், தபால் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. இருப்பினும் 100 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு இருப்பு இல்லாததால் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சில்லரை தட்டுப்பாட்டால் மாவட்டத்தில் பெட்டிக்கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 210 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அவற்றில் 10–க்கும் மேற்பட்ட கடைகள் மதுபான கூடத்துடன் இயங்கி வருகிறது. இவற்றில் இருந்து நாள்தோறும் சராசரியாக ரூ.2½ கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மறுநாளில் இருந்து மது விற்பனை வெகுவாக குறைந்து விட்டது.

    இது பற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், சில்லரை தட்டுப்பாடு காரணமாக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறைந்து விட்டது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு ரூ.2½ கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மது விற்பனை குறைந்து விட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 கோடியே 80 லட்சம் வரை தான் விற்பனையாகி வருகிறது. அதாவது வழக்கமான விற்பனையை விட சுமார் 25 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை குறைவாக உள்ளது என்றார்.
    மத்திய அரசு ரூ.500, மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    மத்திய அரசு ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி அறிவித்தது.

    இதனால் வங்கியில் அந்த பணத்தை மாற்ற மக்கள் நீண்ட வரிசசையில் காத்து நிற்கின்றனர். ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடலூரில் பெரும் பாலான ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை. ஒரு சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகின்றன. எனவே பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு ரூ.500, மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

    இதையொட்டி இன்று காலை தலைமை தாபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்ய தயாரானார்கள். தகவல் அறிந்ததும் இன்ஸ் பெக்டர்கள் வெற்றிச் செல்வன், சரவணன், சீனிபாபு, சப்-இன்ஸ் பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என்று இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வம் கூறினார். அதற்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி உண்டு என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மனிடம் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் இந்தபிரச்சினை குறித்து செல்போனில் பேசினார். அதற்கு அவர் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.

    இந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளிடம் இன்ஸ் பெக்டர் கூறினார். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்வோம் என்று எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரை கண்டித்து கடலூர் புதுவை சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

    அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. போலீசுக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பினர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    சாலைமறியலில் ஈடுபட முயன்ற மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ரிசர்வ் வங்கி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வரவு செலவு கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வங்கியில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த வந்தால் அதனை வாங்க முடியவில்லை. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பணத்தை கொடுக்க முடியவில்லை.

    வங்கியில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பணபரிவர்த்தனையை தொடங்க அனுமதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    கடலூர் மாவட்டத்தை கலக்கிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    கடலூர், நெல்லிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர், காட்டு மன்னார்கோவில், மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளில் நகை-பணம் கொள்ளை போவது தொடர்ச்சியாக நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

    கொள்ளையில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கடலூர் டெல்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (வயது 29) மற்றும் காட்டு மன்னார்கோவில் மா.கொளக்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபுவிடம் ஒப்படைத்தனர். முருகன், ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கடலூர் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் முருகனுக்கும், ரமேசுக்கும் தொடர்பு உள்ளதும், ஒரத்தூர் போலீஸ் நிலையத்தில் நகை பறித்த வழக்கு மற்றும் விருத்தாசலத்தில் ஒரு பெண்ணை 13 பேர் சேர்ந்து கற்பழித்த வழக்கிலும் ரமேஷ் சம்பந்தப்பட்டவன் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

    இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் 100 கிராம் தங்கம், 133 கிராம் வெள்ளி, 22 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் 2 பேரையும் கடலூர் முதுநகர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×