என் மலர்tooltip icon

    கடலூர்

    வார்தா புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிப்பதால் கடலூர், மரக்காணத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    கடலூர்:

    வங்கக்கடலில் உருவான வார்தா புயல் கடந்த 12-ந் தேதி சென்னையில் கரையை கடந்தது. இந்த புயல் வலுவிழந்து அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக நிலை கொண்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கடலூரில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. காலை வரை நீடித்தது. காலை 6 மணிக்குமேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை கொட்டுகிறது. ரோடுகளில் தண்ணீர் பெருகி ஓடுகிறது.

    மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், திருவந்திபுரம், பாலூர், பட்டாம்பாக்கம், காராமணிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை பலத்த மழை பெய்தது. மக்கள் குடை பிடித்தபடி சென்றனர்.

    வார்தா புயல் கரைகடந்த பின்பு கடலூரில் கடல் சீற்றம் குறைவாக உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். ஆனால் ஆழ்கடலில் நீரோட்டத்தின் வேகம் அதிகரித்துள்ளது.

    எனவே ஆழ்கடல் பகுதியில் மீனவர்களுக்கு அதிக மீன் கிடைக்கவில்லை. அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். இதையடுத்து கடற்கரை பகுதிகளில் அவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்தில் காலை 5.50 மணியளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.

    மரக்காணத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. 7.30 மணியளவில் மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

    மரக்காணம், அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு, எண்டியூர், முருக்கேரி, பிரம்மதேசம், கைப்பாணிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மரக்காணத்தில் கடலில் அதிக சீற்றம் இல்லை. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
    பெண்ணாடம் அருகே லாரி மீது கல்லூரி பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 25 மாணவிகள் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ஆவினங்குடி போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    பெண்ணாடம்:

    பெரம்பலூரில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்லூரிக்கு மாணவிகளை அழைத்து செல்ல 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் கடலூர் மாவட்டத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    இன்று காலை கல்லூரி பஸ் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மாணவிகளை ஏற்றிக் கொண்டு பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டி ருந்தது.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் காயம் அடைந்தனர்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்து கல்லூரி பேராசிரியைகள், தீபா, ரம்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிலர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பெண்ணாடம் அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் கார் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள ராமநத்தம் ஹைவேசிட்டி நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). இவர் பெண்ணாடம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர் பெரம்பலூர் மாவட்டம் லெப்பை குடிகாடு பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார்.

    நேற்று காலை வழக்கம் போல் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தங்களது பணிகளுக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டின் பூஜை அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 1 கிலோ வெள்ளி பொருட்களையும், ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் வீட்டிற்கு பின்னால் நிறுத்தி வைத்திருந்த காரையும் திருடிச் சென்றுவிட்டனர்.

    மாலையில் வீடு திரும்பிய விஜயா வீட்டின் உள்ளே சென்றபோது பூஜை அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. பீரோவில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் பின்னால் நிறுத்தியிருந்த கார் திருட்டு போயிருந்தது அவருக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது.

    இதுகுறித்து விஜயா தனது கணவர் அய்யப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அய்யப்பன் ராமநத்தம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்த நிலையில் விஜயாவின் உறவினர்கள் திருட்டு போன காரை திட்டக்குடி அருகே பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிளில் முந்திச்சென்றதை கண்டித்த சிதம்பரம் பல்கலைக்கழக பேராசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் மீதிகுடி ரோட்டைச் சேர்ந்தவர் சிதம்பரராஜா(வயது 52). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறையில் உதவி பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இன்று காலை வீட்டிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு மோட்டார் சைக்கிளிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் சந்தோஷ் குமார்(23) விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு மோட்டார் சைக்கிளிலில் வந்தார்.

    பல்கலைக்கழக வளாகத்தில் வந்தபோது சந்தோஷ் குமார் மிகவும் வேகமாக உதவி பேராசிரியர் சிதம்பரராஜாவின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    சந்தோஷ்குமாரை உதவி பேராசிரியர் கண்டித்தார். இதனால் சந்தோஷ்குமார் ஆத்திரமடைந்து சிதம்பர ராஜாவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பாதிக்கப்பட்ட சிதம்பரராஜா உடனடியாக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வார்தா புயல் காற்றழுத்த தாழ்வாக நீடிப்பதால் கடலூர் மற்றும் மரக்காணத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடல் சீற்றம் குறைந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    கடலூர்:

    தென்வங்கக்கடலில் உருவான வார்தா புயல் நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்தது. இதுதொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடித்து வருகிறது.

    இதையொட்டி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதன்படி கடலூரில் நேற்று காலை மழை பெய்தது. கடல் அதிக சீற்றமாக காணப்பட்டது. அதிக உயரத்துக்கு அலைகள் எழுந்தன.

    நேற்று காலை கடல் அலையின் வேகம் திடீரென்று குறைந்தது. கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் உள்வாங்கியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இன்று 2-வது நாளாகவும் கடல் உள்வாங்கியே காணப்படுகிறது. கடலூரில் இன்று காலை 6 மணி முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. நெல்லிக்குப்பத்தில் நேற்றிரவு 12 மணி முதல் 1 மணிவரை பலத்த மழை கொட்டியது. கடலில் சீற்றம் அதிகம் இல்லை. கடல் சீற்றம் இல்லாததால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க சென்றனர்.

    பண்ருட்டியிலும் இன்று காலை மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சிதம்பரத்தில் மேகம் இருண்டு காணப்படுகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று காலை 7.30 மணியளவில் லேசாக மழை பெய்தது. தொடர்ந்து கனமழை கொட்டியது. 9 மணிவரை மழை நீடித்தது.

    மரக்காணம், அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு, ஆலத்தூர், பிரம்மதேசம், எண்டியூர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது. ரோடுகளில் தண்ணீர் பெருகி ஓடியது.

    கடற்கரை பகுதியில் குளிர்ந்த காற்று வீசுகிறது. மரக்காணத்தில் இன்று கடல் சீற்றம் குறைந்தது. இதனால் மரக்காணத்தை சுற்றியுள்ள 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க சென்றனர்.
    பண்ருட்டியில் கேட்கீப்பர் தூங்கியதால் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நின்ற கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
    பண்ருட்டி:

    காரைக்காலில் இருந்து சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

    இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1.05 மணியளவில் பண்ருட்டியை நோக்கி வந்தது. பண்ருட்டி அருகே திருவதிகையில் ரெயில்வே கேட் உள்ளது.

    இங்குள்ள கேட்கீப்பர் சிவமூர்த்தி ரெயில் வருவது அறியாமல் தூங்கிவிட்டார். ரெயில்வே கேட்டை அவர் மூடவில்லை.

    இதனால் சிக்னல் கிடைக்காமல் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவதிகை ரெயில்வேகேட் அருகே டிரைவர் நிறுத்தினார்.

    ரெயிலை விட்டு இறங்கி வந்த அவர் தூங்கிக்கொண்டிருந்த கேட்கீப்பரை தட்டி எழுப்பினார்.

    பின்னர் ரெயில்வேகேட் கீப்பர் தூங்கிக்கொண்டிருந்தது குறித்து உயர்அதிகாரிகளுக்கு பண்ருட்டி ஸ்டேசன் மாஸ்டர் புகழேந்தி தகவல் தெரிவித்தார்.

    கேட்கீப்பரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் 2 மணியளவில் ரெயில்வே கேட் பூட்டப்பட்டது. இதையடுத்து 1 மணி நேரம் தாமதமாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.

    இந்தசம்பவத்தால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வழக்குகளை காரணம் காட்டி அ.தி.மு.க.வை மத்திய அரசு மிரட்டுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஜாதியின் பெயரால் ஆணவக்கொலைகள் அதிகரித்துள்ளன. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் ஒரு சதவீதம் கூட நடைமுறை படுத்தவில்லை.

    தனிப்பட்ட விரோதங்களால் மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. தற்போது மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் யார்? என்பதை அ.தி.மு.க. அடையாளம் காட்டி உள்ளது.

    ஆனால் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் யார்? என்பது தற்போது விவாத பொருளாக ஆகிவிட்டது. இது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

    அ.தி.மு.க. அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகும். இந்த அரசு 5 ஆண்டு காலத்துக்கும் தொடரவேண்டும். அரசுக்கு எதிரான சதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்காது. மத்திய அரசு அ.தி.மு.க. மீது உள்ள வழக்குகளை காரணம் காட்டி, அவர்களை அச்சுறுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதாக தெரிகிறது.

    ஜெயலலிதாவால் கடுமையாக எதிர்க்கப்பட்ட பல திட்டங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. எனவே மத்திய அரசின் தலையீடு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

    காவிரி மேலாண்மை திட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும். அத்துடன் தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    ராமநத்தம் அருகே கொரக்கைவாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளமுடியாமல் சிலர் வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடல் சீற்றம் காரணமாக கடலூரில் மீனவர்கள் இன்று 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
    கடலூர்:

    தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்மேற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான வார்தா புயல் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்றும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. அதிக உயரத்துக்கு அலைகள் எழுந்தன.

    கடல் சீற்றம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று 6-வது நாளாக கடலூர் துறைமுகம், தேவானாம் பட்டினம், தாழங்குடா, ராசாபேட்டை, அக்கரை கோரி, பரங்கிபேட்டை, நல்லவாடு உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 1000 கட்டு மரங்கள், 1000 விசைப்படகுகள் ஆகியவை கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கடல் சீற்றம் இல்லாத காலங்களில் அனைத்து படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் கடலூருக்கு50 டன்முதல் 100 டன் வரை மீன் வரத்து இருக்கும். சாதாரண நாட்களில் 10 முதல் 20 டன் வரை மீன் கிடைக்கும். தற்போது கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் 50 டன் மீன் வரத்து குறைந்துள்ளது. எனவே கேரளாவுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படவில்லை. மார்க்கெட்டிலும் குறைந்த அளவு மீன்களே விற்பனை செய்யப்பட்டன.
    கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டத்தால் தாழங்குடா பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வில்லை.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான ‘வார்தா’ புயல் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) ஆந்திர மாநிலம் நெல்லூர்- காக்கி நாடா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    அலைகள் ஆக்ரோ‌ஷமாக கரையை வந்து மோதுகிறது. இதையடுத்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா மற்றும் கடற்கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    தாழங்குடா கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டதால், அங்கு நிறுத்தியிருந்த படகுகளை கடல் அலைகள் இழுத்துச்செல்லும் நிலை ஏற்பட்டது. இதை பார்த்த மீனவர்கள் உடனடியாக அந்த படகுகளை, மேடான பகுதிக்கு எடுத்துச்சென்றனர்.

    இது குறித்து தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், “கடல் சீற்றம் ஏற்படும்போது மண் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ள படகுகளை இழுத்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த படகுகள் சேதமடைகிறது.

    இதனை தடுக்கவும், பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைக்கவும் மேடான இடத்தை தேர்வு செய்து ஒதுக்கி தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர்.

    கடல் சீற்றம் காரணமாக 5-வது நாளாக கடலூரில் இன்று மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு கடலூரில் வங்கி-ஏ.டி.எம்.களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    கடலூர்:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்தது.

    பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வரும் 30-ந் தேதி வரை டெபாசிட் செய்யலாம் எனஅறிவிக்கப்பட்டது.

    ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்குப் பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்துக்கு வராததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிகளிலும் சரி, ஏ.டி.எம்.களிலும் சரி பொதுமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் தேவையான அளவுக்கு எடுக்க முடியாமல தவித்து வருகின்றனர்.

    பணத்தட்டுப்பாடு பிரச்சினை கடலூர் மாவட்ட மக்களையும் விட்டு வைக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் 234 அரசுடைமை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.கள் உள்ளன.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் முன்பு பொதுமக்கள் காத்துக்கிடப்பது வாடிக்கையாகி விட்டது. கடலூரில் வங்கிகள் திறக்கும் முன்பே பொதுமக்கள் காத்திருக்கும் அவலத்தை காணமுடிகிறது.

    இந்த நிலையில் வங்கிகளுக்கு நாளை முதல் வரும் திங்கட்கிழமை (12-ந் தேதி) வரை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் பணபரிவர்த்தனை செய்ய முடியாது. எனவே இன்று வங்கிகளில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் காணப்பட்டது.

    வங்கிகளில் குறைவான அளவே பொதுமக்களுக்கு பணம் கொடுத்தனர். இதனால் வங்கியை விட்டு வெளியே வரும் பொதுமக்கள், மீண்டும் வங்கிகள் இனி செவ்வாய்கிழமை தான் திறக்கும் என்பதால் குறைவான பணத்தை வைத்து கொண்டு எப்படி 3 நாட்கள் சமாளிப்பது என புலம்பியபடி சென்றதை காண முடிந்தது.

    கடலூர் மாவட்டத்தில் இன்று பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படாமல் மூடியே இருந்தன. கடலூரில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.களில் கடலூர் மஞ்சக்குப்பம்,திருப்பாதி ரிப்புலியூர், சிதம்பரம் ரோடு,திருவந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஒருசில ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே இன்று இயங்கின.

    இதனால் பொது மக்களின் கூட்டம் ஏ.டி.எம். முன்பு அலைமோதியது. ஏ.டி.எம்.களில் விரைவிலேயே பணம் தீர்ந்து விடுவதால் வரிசையில் காத்திருப்பவர்கள் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

    பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பா.ம.க. பிரமுகர் படுகாயம் அடைந்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி சென்னை சாலை எல்.என்.புரம் கிராமத்தில் வசித்துவருபவர் மங்களம்(வயது 61). ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது கணவர் கோதண்டபாணி(66). இவர் பா.ம.க. பிரமுகர்.

    கோதண்டபாணி பண்ருட்டியிலிருந்து எல்.என்.புரத்திற்கு மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோதண்டபாணி புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    விபத்துகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தடையை மீறி சாலை மறியல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட 6 பேரை விடுதலை செய்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    கடலூர்:

    2013-ம் ஆண்டு வன்முறையை தூண்டி விடுவதாக கூறி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழையக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

    இந்த தடையை நீக்கக் கோரி பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைத்தலைவர் தாமரைக்கண்ணன், முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, புதுவை மாநில அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கடலூரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதையடுத்து தடையை மீறி சாலைமறியலில் ஈடுபட்டதாக ஜி.கே.மணி உள்பட 6 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இந்தவழக்கு விசாரணை கடலூர் நீதித்துறை 2-ம் எண் நடுவர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.

    இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதி ரமேஷ் விசாரணை நடத்தினார்.

    வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணைத்தலைவர் தாமரைக்கண்ணன், முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, புதுவை மாநில அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். பா.ம.க.சார்பில் வக்கீல் தமிழரசன் ஆஜராகி வாதாடினார்.
    ×