என் மலர்
கடலூர்
நெய்வேலி:
கடலூர்-விருத்தாசலம் மெயின்ரோட்டில் மந்தாரக்குப்பம் உள்ளது. இங்கு 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மந்தாரக்குப்பத்தில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மந்தாரக்குப்பம் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க கூடாது என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி இன்று வர்த்தகர்கள் நெய்வேலி வர்த்தக சங்கங்க நிர்வாகிகள் பாபு தலைமையில் திரண்டனர். அவர்கள் காரைக்காலில் இருந்து பெங்களூர் செல்லும் ரெயிலை மறிப்பதற்காக மந்தாரக்குப்பம் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 200-க் கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆபேல் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் சுமதி, முத்துராமன், ராமாயி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை. அன்பரசன், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜசோழன், சிவஞானம், சுந்தரமூர்த்தி, முருகன், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் எம்.ஜி.ஆர்.சிலை அமைப்பது, தீபா தலைமையில் தொண்டர்களை திரட்டி ஆட்சியை பிடிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ.துரை அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா இருந்த இடத்தில் சசிகலாவை ஏற்க முடியாது. அ.தி.மு.க. உடைந்தபோது ஜெயலலிதாவுடன் இருந்த 33 எம்.எல்.ஏ.க்களில் இரட்டை இலை சின்னம் கிடைக்க கையெழுத்து போட்டவர்களில் நானும் ஒருவன். என் போன்ற உண்மையான தொண்டர்கள் யாரும் சசிகலாவை ஏற்க மாட்டார்கள்.
தீபாவை சந்தித்து தொண்டர்களை வழி நடத்த வேண்டும் என மனு கொடுத்துள்ளேன். ஜெயலலிதா இடத்துக்கு தீபா மட்டுமே வர தகுதியானவர் ஆவார்.
என்போன்ற உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களையும் ஜெயலலிதா விசுவாசிகளையும் ஒருங்கிணைத்து தீபா தலைமையில் அ.தி.மு.க.வையும் ஆட்சியையும் கைப்பற்றும் வரை ஓய மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
1984-ம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக துரை அன்பரசன் இருந்தார்.
தற்போது அவர் தீபாவுக்கு ஆதரவு தெவித்துள்ளார். நெல்லிக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
முன்னாள் எம்.எல்.ஏ. திருச்சி சவுந்தர்ராஜன் ஏற்கனவே தீபாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை. அன்பரசனும் தீபாவுக்கு ஆதரவாக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு இன்று காலை சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன் திரண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தயாரானார்கள். தகவல் அறிந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நிஷா, இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
போராட்டம் நடத்த தயாரான மாணவர்களிடம் இன்ஸ்பெக்டர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தார். பல்கலைக்கழகத்துக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார்.
ஆனால் மாணவர்கள் தொடர்ந்து அங்கே நின்று கொண்டிருந்தனர். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு சென்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்கள் கறுப்பு சட்டை அணிந்திருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால் கைதான மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாட்டு பொங்கலன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
நேற்று மாலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. திருவந்திபுரம், தொட்டி, வரக்கால்பட்டு, சாலைக்கரை, பில்லாளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் தாங்கள் வளர்த்து வரும் பசு மற்றும் காளை மாடுகளை அலங்கரித்து கெடிலம் ஆற்றுக்கு கொண்டு வந்தனர்.
இதன்பின்னர் மாடுகளை கொண்டு வந்தவர்கள் மாடுகளை கையில் பிடித்துக்கொண்டு கெடிலம் ஆற்றை 3 முறை வலம் வந்தனர். அப்போது ஆற்றின் கரையை நோக்கி அனைத்து மாடுகளும் ஓடின. இதனை ஆற்றங்கரையிலும் பாலத்தின் மேலும் நின்று ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சி 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. முன்னதாக அதிகாலையில் 3.30 மணிக்கு தேவநாத சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரத்தில் ஆண்டாள் மற்றும் நாச்சியாருடன் தேவநாதசாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அசம்பாவித சம்பவம் ஏதேனும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதே போல் நெல்லிக்குப்பத்தில் உள்ள பங்களா தெருவிலும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாடுகளை இளைஞர்கள் விரட்டிச் சென்றனர்.
கடலூர்:
கடலூர் வன்னியர் பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). மெக்கானிக். இவர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்பன்நாயக்கன் சாவடி அய்யனார் கோவில் அருகில் சொந்தமாக கார் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார்.
நேற்று பொங்கலை முன்னிட்டு முருகன் அவரது கடையில் பொங்கல் கொண்டாடினார். பின்னர் இரவு அவர் கடைக்குள்ளேயே தூங்கினார்.
இந்த நிலையில் காவலாளி பாதாளம் (28) நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்தார். மெக்கானிக் முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வெளியே அலறியபடி வெளியே ஓடிவந்தார்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முருகனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முருகனை யாரோ கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் முருகனை கொலை செய்தது யார்? தொழில் போட்டியில் முன்விரோதம் காரணமாக யாரேனும் அவரை கொலை செய்தனரா? பொங்கல் கொண்டாட்டத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகனின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்து தகவல் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
அந்த கடையில் காவலாளியாக வேலை பார்த்த பாதாளத்திடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கடலூர் நகரில் பெரும் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் எற்படுத்தி உள்ளது.
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறந்த முருகனுக்கு வசந்தி என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
நெல்லிக்குப்பம்:
கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் தபால் நிலையத்தில் பொதுமக்கள் மணியார்டர் செய்யும் பணம் கையாடல் செய்யப்படுவதாக துணை அஞ்சலக ஆய்வாளருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் அஞ்சலக ஆய்வாளர் கணேஷ் நெல்லிக்குப்பம் தபால்நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு 22-ந் தேதிவரை முதியோர் உதவித்தொகை, மணியாடர் உள்ளிட்ட பொதுமக்களின் பணத்தை தபால்காரர் ராஜேந்திரன் போலியாக கையெழுத்திட்டு ரூ.7 ஆயிரம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆய்வாளர் கணேஷ் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சென்னையில் இருந்து நாகூர் செல்வதற்காக 4 பேர் நேற்று இரவு காரில் புறப்பட்டனர். அந்த கார் இன்று காலை கடலூரை அடுத்த பெரியகங்கனாங்குப்பம் பகுதியில் வந்து கொண் டிருந்தது. அப்போது அதே பகுதியில் கடலூரில் இருந்து புதுவைக்கு சிமெண்டு பாரம் ஏற்றி லாரி சென்றுகொண்டிருந்தது.
எதிர்பாரத விதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் அந்த கார் லாரியின் அடிப்பகுதிக்குள் சிக்கி முற்றிலுமாக சேத மடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுவன் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலயே உடல்நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.
இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் லாரியின் இடிபாட்டுக்குள் சிக்கி சேதமடைந்த காரை ஜே.சி.பி.எந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தினர். பலியான 4 பேர் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தில் பலியானவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த ஜான்முகமது நாச்சியார்(55), ரிபாக்அகமது(11), தன்வீர் மதார்(25), ரகுமான்(28). என்று தெரியவந்தது.
மேலும் இவர்கள் ஜான்முகமது நாச்சியாரின் மகனை வெளி நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தால் கடலூர்- புதுவை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கடலூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு நடத்தினர். கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் இன்று காலை நாம் தமிழர் கட்சியினர் திரண்டனர்.
அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தீர்மானித்தனர். அதைத்தொடர்ந்து மைதானத்தை சுற்றி தடுப்பு கம்புகளை கட்டினர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது போன்று மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெற்றன.
கிராமங்களில் இருந்து 15 காளை மாடுகளை மைதானத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஒவ்வொரு காளைகளாக மைதான பகுதிக்கு விரட்டி விடப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர்.
காளைகள் அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடின. ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதை அறிந்து திருவந்திபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
காளைகளை இளைஞர்கள் அடக்குவதை பார்த்து ரசித்து கரகோஷம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் நாம் தமிழர் கட்சியினர் காளைகளை விரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசு, கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ரவி, திருவாரூர் மாவட்ட பொருளாளர் பாலாஜி, கடலூர் நகர செயலாளர் நாராயணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் விசாரணை நடத்தி வருகிறார்.
தடையை மீறி நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடலூர்:
மறைந்த முதல்-அமைச் சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் அவரை ஆதரித்து பேனர் வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த டெல்டா விஜயன் என்பவர் தற்போது வடலூரில் ஜெ.ஜெ.தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். அந்த அமைப்புக்கு மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து உள்ளார்.
ஜெ.ஜெ.தீபா பேரவையின் புதிய உறுப்பினர் படிவம் வழங்கும் விழா வடலூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பின்னலூர் தங்க உதயகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஜெ.ஜெ.தீபா பேரவை நிறுவனத் தலைவர் டெல்டா விஜயன் கலந்து கொண்டு உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.தலைமைக்கு தீபாதான் தகுதியானவர் ஆவார். அ.தி.மு.க. தொண்டர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
தீபா புதுகட்சி தொடங்கி தமிழகத்தில் நல்லாட்சி வழங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கினால் நாம் அவருக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். தீபாவை சென்னையில் 2 முறை நிர்வாகிகள் சந்தித்து பேசினோம்.
அப்போது அவர் விரைவில் நல்ல தகவல் கூறுகிறேன் என்று தெரிவித்தார். மீண்டும் அவரை தொண்டர்களுடன் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். அவர் அழைப்பு விடுத்தால் விரைவில் தீபாவை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ், சலிம்ஷா, சிங்கார வேல், தமிழ்செல்வம், கொளஞ்சி, ராஜீ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
ஜெ.ஜெ.தீபா பேரவை தொடங்கி உள்ள டெல்டா விஜயன் சமாஜ்வாடி கட்சியில் செயலாளராக இருந்த வந்தார். அந்த கட்சியிலிருந்து விலகி தற்போது அவர் ஜெ.ஜெ.தீபா பேரவை தொடங்கியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 9-வது நாளான நேற்று தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர் கீழவீதியில் உள்ள தேர் நிலை திடலை அடைந்தது.
அதைத்தொடர்ந்து சிவகாமசுந்தரி அம்மன், நடராஜருக்கு 21 முறை தீபாராதனை நடந்தது. பின்னர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்மன் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு இரவு 7 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியும், 10-வது நாள் திருவிழாவுமான ஆருத்ரா தரிசனம் இன்று மாலை நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்மனுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.
இன்று மாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தை காண காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நாளை(வியாழக்கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா காட்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெப்பல் உற்சவமும் நடை பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்வதும் மனமுடைந்து இறப்பதும் அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52). இவர் அதே பகுதியை சேர்ந்த ராமதுரை என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டிருந்தார்.
பருவ மழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் குறைந்ததாலும், பயிர்கள் கருகின. பயிர்களை காப்பாற்ற முடியவில்லையே என்று இளங்கோவன் மனமுடைந்தார். வாங்கிய கடனை எப்படி அடைக்கப்போகிறோம்? என்ற வேதனையில் விஷம் குடித்து விட்டார்.
மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலைப் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள மந்தாரகுப்பம் பழைய ரெயில்வே கேட் காலனி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 26).
மந்தாரகுப்பத்தில் சவர கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர். வேலு மகன் தமிழ் (25). கடந்த சில மாதத்திற்கு முன்பு கடை விரிவாக்கத்திற்காக சிலம்பரசன் தமிழிடம் கடன் வாங்கினார்.
இந்த நிலையில் தமிழ் தனது தந்தை வேலுவை அழைத்துக்கொண்டு சிலம்பரசனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே தமிழ் அவரது தந்தை வேலு ஆகிய 2 பேரும் சேர்ந்து சிலம்பரசனை தாக்கினர். காயம் அடைந்த சிலம்பரசன் தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்து சிலம்பரசன் மந்தாரகுப்பம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்குப்பதிவு செய்து தமிழ், வேலுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.






