search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் 12-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்: விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுமா?
    X

    நீலகிரியில் 12-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்: விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுமா?

    • தேயிலை விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து இடம்பெயரும் குடும்பங்கள்
    • தேயிலை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே விவசாயிகளுக்கும் நியாயம் கிடைக்கும் என்று வலியுறுத்தல்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க கோரி அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 12-வது நாளாக தொடர்கிறது. ஒரு நாள் ஒரு கிராமத்தினர் என்ற முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேயிலை விலை வீழ்ச்சியால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், எனவே அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    தர்மலிங்கம்:

    நீலகிரி தேநீருக்கு உலகஅளவில் மவுசு உண்டு. அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் பல்வேறு சிறப்புகளை உடையது. ஆனால் தேயிலை விலை வீழ்ச்சி காரணமாக, நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்கள் அழிந்து வருகின்றன.

    சித்ரா:

    நீலகிரி மலைகளில் விளையும் இந்திய கருப்பு தேயிலை வகை, அதிக உயரம் மற்றும் பனிமூட்டமான காலநிலை காரணமாக தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தை கொண்டது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான தேயிலைகளில் ஒன்று. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நீலகிரியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தேயிலை வாரியம் எங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    ஹாலம்மாள்:

    பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தேயிலை பயிரிடுவதற்கு ஏற்ற இடமாக நீலகிரியை அடையாளம் கண்டனர். அங்கு கடந்த 1854-ம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் தேயிலைத் தோட்டங்களை நிறுவத் தொடங்கியது. இங்கு பல ஆண்டுகளாக தேயிலை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கொள்முதல் விலையாக ரூ.18 வழங்கினர். அதற்கும் குறைவாகவே தற்போதும் வழங்கி வருகின்றனர். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தேயிலை கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    ராஜம்மாள்:

    நீலகிரி தேயிலை தொழில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. தேயிலை தொழிலை ஒழுங்குபடுத்தி ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீலகிரி தேயிலை மலிவு விலையில் சிறந்த தரத்தை வழங்குவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்த்து உள்ளது. எனவே இப்பகுதியில் முதலீடுகள் அதிகரித்து உள்ளது. மேலும் உள்ளூர் சமூகத்தின் பொருளாதாரமும் ஊக்கம் பெற்று உள்ளது. ஆனால் தேயிலைக்கு போதிய உற்பத்தி விலை கிடைப்பதில்லை. எங்களுக்கு தேயிலை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. சம்பந்தப்பட்ட துறையினர் தேயிலைக்கு நிரந்தர விலை அளிக்க வேண்டும்.

    எஸ்.கே.போஜன்:

    நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதை நம்பி 65 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். பச்சை தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேயிலை சட்டப்பிரிவு 30ஏ-வை அமல்படுத்த வேண்டும்.

    சவுமியா:

    பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரதமர், மத்திய வர்த்தக மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. ஆனாலும் பலனில்லை. இதனால் விவசாய சங்கத்தினர் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்யக்கோரி கடந்த 1-ந் தேதி முதல் நீலகிரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் பேராட்டத்துக்கு அனைத்து தரப்பு இளைஞர்களும், பெண்களும் ஆதரவு தர வேண்டும். தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்க வேண்டும்.

    ஜி.எல்.ஆர்.குமார்:

    தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி 400 கிராமங்களில் இருந்து 65 ஆயிரம் விவசாயிகளுடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். எனவே எம்.பி, அமைச்சர், மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரிய அதிகாரிகள் கூட்டாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். விளைநிலங்கள் கட்டிடங்களாக மாறாமல் இருக்க, விவசாயிகள் புலம்பெயர் தொழிலாளிகளாக மாறாமல் இருக்க, தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

    ஜோகி (கக்குச்சி):

    நீதிமன்ற தீர்ப்புப்படி தேயிலை சட்டபிரிவை அமுல்படுத்த வேண்டும். ஒருசில வியாபாரிகளின் தந்திரத்தால் தேயிலை தொழிற்சா லைகளும், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    முருகேஷ்:

    அரசு தேயிலை வாரியத்தில் 45 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர். எங்களுக்கு கடந்த 4 தலைமுறையாக பசுந்தேயிலைகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. தமிழக அரசின் கூற்றுப்படி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேயிலை விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து இடம்பெயர்ந்து உள்ளனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள்தொகை குறைந்து உள்ளது கவனிக்கத்தக்கது. விவசாயிகள் விளைநிலங்களை விற்று வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது. இதே நிலை நீடித்தால் தேயிலைத் தொழில் முழுவதுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளது. எங்களை அரசாங்கம் தான் காப்பாற்ற வேண்டும்.

    சந்திரன், (தும்பூர்):

    தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதில் தேயிலை வாரியம் தனது கடமையை தட்டிக்கழித்து வருகிறது. சாகுபடி செலவின் அடிப்படையில் நியாயமான விலை தந்தால் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். சிறு-குறு தேயிலை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வரை போராட தயாராக உள்ளோம்.

    மோகன், (கீழ்அணைஹட்டி):

    குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயிக்க தேயிலை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே இந்த ஒழுங்கீனத்தை சரி செய்ய முடியும். வஞ்சிக்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கும் நியாயம் கிடைக்கும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

    தியாகு:

    தேயிலை விவசாயிகளின் பாதிப்பு குறித்து அனைத்து தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளோம். அவர்கள் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்களின் போராட்டம் அமையும்.

    இவ்வாறு தேயிலை விவசாயிகள் கூறினர்.

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி நட்டக்கல் மட்டுமின்றி ஊட்டி பகுதியிலுள்ள இத்தலார், பாலகொலா பகுதிகளிலும் விவசாயிகள் 12-வது நாளாக தேயிலை விலை நிர்ணயம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

    Next Story
    ×