என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 3-வது நாளாக மழை கொடைக்கானல் சாலைகளில் ஆறுபோல் ஓடிய மழைநீர்
- திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
- இடைவிடாது கொட்டி தீர்த்த மழையினால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் கொடைக்கானல், பழனி, சத்திரப்பட்டி, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் நேற்று 3-வது நாளாக பகலில் தொடங்கிய மழை நள்ளிரவுக்கு மேலும் நீடித்தது. இடைவிடாது கொட்டி தீர்த்த மழையினால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியதால் நடந்து செல்லமுடியாமலும், வாகனங்களில் பயணிக்க முடியாமலும் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
ஏற்கனவே சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்ட நிலையில் தற்போது பெய்த கனமழையால் மேலும் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தது. இதேபோல் திண்டுக்கல் நகரிலும் கொட்டிதீர்த்த மழையினால் மாநகராட்சிக்குட்பட்டட பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைகளாக மாறிவருகின்றன. மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் வாகனங்கள் தவறிவிழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
கூட்டுறவு நகர், சுப்ரீம்நகரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது பாதாளசாக்கடை தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம்போல் தேங்கியது. அதனை மாநகராட்சி அதிகாரிகள் ஒருவாரமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து தண்ணீர் தேங்கி கிடந்த நிலை மாறியது. தற்போது 3 நாட்களாக பெய்த கனமழையால் சுப்ரீம்நகரில் மீண்டும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
அங்கு ெகாசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு முன்னதாக போதிய வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெறாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 282 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது. திண்டுக்கல் 10.6, கொடைக்கானல் 53, பழனி 31, சத்திரப்பட்டி 57.2, வேடசந்தூர் 1.2, போட்கிளப் 127.9 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.






